முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் சகோதரர் மகனுமான ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3,000-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் கடந்த மாதம் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோத்திருக்கும் பா.ஜ.க, இதை வேண்டுமென்றே மறைத்து கூட்டணி வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடின.
அதேசமயம், மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, இந்த வீடியோ விவகாரம் குறித்து கடந்த டிசம்பர் மாதமே பா.ஜ.க தலைமைக்குக் கடிதம் எழுதி எச்சரித்த பா.ஜ.க தலைவர் ஜி.தேவேந்திர கவுடா-வை விசாரித்து வருகிறது. இருப்பினும், பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதால் போலீஸாரால் கைது நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது.
இதன்காரணமாக, பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை முடக்கி அவரை இந்தியாவுக்கு கொண்டுவருமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியிருக்கிறார். இன்னொருபக்கம் குமாரசாமி, `பிரிஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் இந்தியாவுக்கு திரும்பி வந்துவிடுங்கள். தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயம்… இந்தியா திரும்பி நமது குடும்பத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்’ என்று இரண்டு நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா இனியும் தன்னுடைய பொறுமையைச் சோதிக்காமல் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று தேவகவுடா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக, தேவகவுடா தனது X சமூக வலைதளப் பக்கத்தில் `பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு என்னுடைய எச்சரிக்கை’ என கடிதம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின்கீழ் அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். கடந்த சில வாரங்களாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக மக்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினர் என்பதை அறிவேன். அவர்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை. பிரஜ்வலின் செயல்பாடுகள் பற்றி எனக்குத் தெரியாது, அவரைக் காக்க எனக்கு விருப்பம் இல்லை, அவரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி தெரியாது என்று அவர்களை நான் சமாதானப்படுத்த முடியாது.
இந்தத் தருணத்தில் என்னால் ஒன்றுதான் செய்ய முடியும். பிரஜ்வல் எங்கிருந்தாலும் திரும்பி வந்து போலீஸில் சரணடைய வேண்டும். அவரே தன்னை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இது என்னுடைய கோரிக்கை அல்ல, எச்சரிக்கை. இதற்குச் செவிசாய்க்காவிட்டால், என்னுடைய கோபத்துக்கும், மொத்த குடும்பத்தினரின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும். அவர் மீதான குற்றச்சாட்டுகளை சட்டம் கவனித்துக்கொள்ளும். ஆனால், குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காமல் இருப்பது அவர் மொத்தமாகத் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.
என்மீது அவருக்கு மரியாதை இருந்தால், அவர் உடனடியாக திரும்ப வேண்டும். மேலும், இந்த வழக்கின் விசாரணையில் என்னிடமிருந்தோ, எனது குடும்பத்திடமிருந்தோ எந்தவிதமான தலையீடும் இருக்காது. மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது எனக்கு மிகவும் முக்கியமானது. எனது அரசியல் வாழ்வில் 60ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் என்னுடன் நின்றார்கள். அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரை, அவர்களை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb