மேற்கு வங்கத்தின் கட்டல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: இண்டியா கூட்டணி தலைவர்கள் தங்கள் வம்சம் முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றனர். நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவர் எவரும் அதில் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கான எந்த எண்ணமும் அவர்களிடம் இல்லை.
இண்டியா கூட்டணியில் தலைவர்கள் எவரும் இல்லை. 5 ஆண்டுகளில் 5 பேர் பிரதமராக பதவி வகிக்க இக்கூட்டணி விரும்புகிறது. இண்டியா கூட்டணியில் பிரதமராக வரக்கூடிய தலைவர் இல்லை என்பதுடன் தேசத்தின் வளர்ச்சிக்கான எந்த எண்ணமும் இக்கூட்டணிக்கு இல்லை.
தற்போது நடைபெறும் தேர்தலானது, குடும்ப அரசியலில் ஈடுபடும் தலைவர்களுக்கும் நாட்டை தனது குடும்பமாக கருதும் நேர்மையான தலைவர் நரேந்திர மோடிக்கும் இடையிலானது ஆகும்.
சரத் பவார் தனது மகள் முதல்வராக வேண்டும் என விரும்புகிறார். மம்தா பானர்ஜி தனக்குப் பிறகு தனது மருமகன் முதல்வராக வேண்டும் என விரும்புகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனக்குப் பிறகு தனது மகனைஅந்தப் பதவியில் பார்க்க விரும்புகிறார். ராகுல் பிரதமராக வேண்டும் என்று சோனியா காந்தி விரும்புகிறார்.
இவர்களுக்கு மறுபுறத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் தனது குடும்பமாக கருதும் நரேந்திர மோடி இருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் கோரிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை.
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதால் அது சாத்தியமில்லை என காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி என்று நாங்கள் கூறுகிறோம். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதனை மீட்போம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.