புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக காவலரிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருப்பதாக கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த சம்பவத்தில் நேரடி சாட்சி யாரும் இல்லாததால், அறிவியல்பூர்வமான சோதனையின் அடிப்படையில் விசாரணை நடந்து வந்தது. 7 காவலர்கள் உட்பட 221 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவும், தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியின் முடிவும் பொருந்தவில்லை.
இதையடுத்து, சம்பவத்தின்போது புதுக்கோட்டை ஆயுதப்படையில் பணிபுரிந்து, தற்போது மணமேல்குடி காவல் நிலையத்தில் காவலராக உள்ளவர் உட்பட 5 பேரிடம் சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட காவ லர் நேற்று ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையிலான போலீஸார் காலை 11.10 மணி முதல் விசாரணை மேற்கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமாரை வரவழைத்து சான்று பெற்றனர். இந்த விசாரணை மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. பின்னர், அந்த காவலர் தனது வழக்கறிஞருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து டிஎஸ்பி கல்பனா தத் கூறியபோது, ‘‘காவலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதை வைத்து இந்த விசாரணை முடிந்துவிட்டதாக கூற முடியாது. தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் மேலும் சிலருக்கு சம்மன் அளித்து விசாரிப்போம். இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப் படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
இந்த விசாரணை காரணமாக, சிபிசிஐடி அலுவலகத்தின் முன்பும், வேங்கைவயல் கிரா மத்திலும் 200 போலீஸார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விசாரணைக்கு ஆஜரான காவலருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் சிபிசிஐடி அலுவலக பகுதியில் திரண்டிருந்ததால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.