பல்லாவரம் செயின் பறிப்பு சம்பவம்: கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு தமிழக பாஜக அறிவுரை

சென்னை: ‘ஆடம்பர வாழ்க்கைக்காக மாணவர்கள் வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்’ என்று தமிழக பாஜக அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல்லாவரத்தில் ஒரு பெண்ணிடம் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்து செயின் பறித்த இரு கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு செயின் பறிப்பில் ஈடுபட வேண்டிய அளவுக்கு தேவை என்ன? அந்த மாணவர்கள் சென்ற இரு சக்கர வாகனமும் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேலானது.

அக்கறையின்மை, வேலைப்பளு மற்றும் வாட்ஸ்-அப், டிவி ஆகியவையே மாணவர்களின் மீதான பெற்றோரின் கவனச்சிதறல்களுக்கு காரணம். பெட்ரோல், ஆடம்பர வாழ்க்கை, செல்போன் மற்றும் டாஸ்மாக் மதுவுக்கு அடிமையாவது ஆகியவையே மாணவர்களின் பணத் தேவைக்கு சங்கிலி பறிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதற்கான காரணம். இந்த விவகாரத்தில் பல்லாவரத்தில் செயின் பறித்த மாணவர்களை காவல்துறை நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களின் உதவியோடு புரசைவாக்கத்தில் பிடித்துள்ளது பாராட்டுக்குரியது.

சிறைக்குச் செல்லும் அந்த மாணவர்களின் வாழ்க்கை வீணானது. எனவே, பெற்றோர் தங்களின் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.