KKR vs SRH: கோப்பையை வெல்லப்போவது யார்…? ஐபிஎல் வரலாறு சொல்லும் பதில் இதுதான்!

IPL 2024 Final Match: ஐபிஎல் தொடர் என்றாலே அது பரபரப்பு மிகுந்த தொடர் எனலாம். எந்த அணி எப்போதும் வெல்லும் என்பதை பலராலும் கணிக்கவே முடியாது எனலாம். அதுதான் டி20 கிரிக்கெட்டின் சுவாரஸ்யமும் கூட… இன்று பலம் வாய்ந்த அணியாக திகழும் அணியும் கூட நாளை மிகவும் பலவீனமான அணியிடம் படுதோல்வியடைந்து மண்ணைக் கவ்வ அதிக வாய்ப்பிருக்கிறது. கடந்த காலங்களிலும் இதனை நாம் பார்த்திருப்போம். 

இந்த சீசனை எடுத்துக்கொண்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு உதாரணமாக சொல்லலாம். அந்த அணி இந்த சீசனின் லீக் சுற்றின் முதல் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்று முதலிடத்தில் தொடங்கியது. அதன்பின் அது அப்படியே தலைகீழானது. அடுத்த நான்கு போட்டிகளில் தோல்வி, கடைசி லீக் ஆட்டம் மழையால் தடைபடவே தொடரின் பாதி வரை முதலிடத்தில் இருந்த அந்த அணி லீக் சுற்று முடிவில் மூன்றாவது இடத்தை பிடித்து எலிமினேட்டருக்கு வந்தது. தற்போது குவாலிஃபயர் 2 போட்டியில் தோற்றது வேறு கதை. 

வரலாறு முக்கியம் அமைச்சரே…!

இப்படி டி20 கிரிக்கெட் யாராலும் கணிக்க இயலாத ஒன்றாக இருந்தாலும் சில வரலாறுகளையும், புள்ளிவிவரங்களையும் புரட்டிப் பார்க்கும் போது சுமார் 75% வரை உங்களால் சிலவற்றை கணிக்க முடியும் எனலாம். இப்போது, நாக் அவுட் என வந்துவிட்டால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை ஐபிஎல் தொடரில் தவிர்க்கவே முடியாது. இதற்கு சான்று கடந்த 16 ஆண்டுகால ஐபிஎல் வரலாறு எனலாம். 

குவாலிஃபயர் 1 வரலாறு

அப்படியிருக்க, நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. கேகேஆர் – எஸ்ஆர்ஹெச் அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி யாருக்கு என்பதே தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் முதன்மையான கேள்வியாக உள்ளது. அந்த வகையில் நாம் கடந்த கால ஐபிஎல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து அதாவது கடந்த 6 சீசன்களாகவே குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு வரும் அணிகளே வென்றுள்ளன. அந்த வகையில், இந்த முறையும் குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி கோப்பை வெல்லும் எனலாம். 

இருப்பினும், இதற்கு உத்தரவாதம் என ஏதுமில்லை. முன்னர் கூறியது போல் டி20 கிரிக்கெட்டில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். குவாலிஃபயர் 1 போட்டியில் வென்றவர்களே கடந்த ஆண்டுகளில் கோப்பை கைப்பற்றுகின்றனர் என்றால், குவாலிஃபயர் 2 போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு வந்த அணிகள் எத்தனை முறை கோப்பையை வென்றுள்ளது, அது யார் யார் என்பதை அறியும் ஆவலும் உங்களுக்கு இருக்கும்… அதனை தொடர்ந்து காணலாம்.

குவாலிஃபயர் 2 வரலாறு

குவாலிஃபயர் 2 போட்டியில் வென்று அணிகள் மூன்று முறையே கோப்பையை வென்றுள்ளன. ஆம் அதிலும் சன்ரைசர்ஸ் அணி ஒரு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 2 முறையும் என குவாலிஃபயர் 2 போட்டியில் வென்று கோப்பையை வென்றுள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் பெற்ற 2016ஆம் ஆண்டில் குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிச் சென்றது. இறுதிப்போட்டியில் ஆர்சிபி ஹைதராபாத்திடம் வீழ்ந்தது.இந்த தொடரில் அந்த அணி கொல்கத்தாவை எலிமினேட்டரில் வீழ்த்திய குவாலிஃபயர் 2 போட்டிக்கே வந்தது.இது குறிப்பிடத்தகுந்த இன்னொரு விஷயம் என்னவென்றால் எலிமினேட்டரில் ஜெயித்து அதன்பின் கோப்பையை வென்ற ஒரு அணி எஸ்ஆர்ஹெச் மட்டுமே. அதை இந்த தொடரிலும் முறியடிக்கவில்லை. 

மும்பை இந்தியன்ஸ் அணி 2013 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் குவாலிஃபயர் 2 போட்டியில் வென்றே கோப்பையை கைப்பற்றியது. 2013ஆம் ஆண்டில் சிஎஸ்கேவிடம் குவாலிஃபயர் 1 போட்டியை தோற்றாலும், அடுத்து குவாலிஃபயர் 2 போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குச் சென்று அங்கு சிஎஸ்கேவை வதம் செய்தது. 2017ஆம் ஆண்டிலும் குவாலிஃபயர் 1 போட்டியில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் தோல்வியடைந்து, குவாலிஃபயர் 2 போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்று மும்பை கோப்பையை வென்றது. 

இதன்மூலம், சொல்லப்படுவது என்னவென்றால் குவாலிஃபயர் 1 போட்டியில் வென்ற அணிகளே 13 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன. எனவே, வரலாற்றை புரட்டிப் பார்த்தால் நாளை கோப்பையை வெல்ல எஸ்ஆர்ஹெச் அணியை விட கேகேஆர் அணிக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறலாம். இருப்பினும் மீண்டும் ஒரு நினைவூட்டல்… இது டி20 கிரிக்கெட், இங்கு என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.