Dhoni: "உலகளவில் பல கேப்டன்கள் தோனியைப் போல இருக்க விரும்புகிறார்கள்!" – வியப்படைந்த ஜஸ்டின் லாங்கர்

2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில்  கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

இதனிடையே இந்தத் தொடரில் தோனி விளையாடும் சென்னை அணி இறுதிப் போட்டியில் இடம்பெறாதது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இருப்பினும் இந்தியாவுக்காக 3 உலகக் கோப்பைகளை வென்று, சிஎஸ்கே-வுக்காக 5 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள எம்.எஸ்.தோனி மீது சென்னை ரசிகர்கள் கண்மூடித்தனமான அன்பை வைத்திருக்கின்றனர்.

தோனி

குறிப்பாக தோனி பேட்டிங் செய்வதைப் பார்ப்பதற்காக தங்கள் அணியின் மற்றொரு பேட்ஸ்மேன் அவுட்டாக வேண்டும் என விரும்பும் அளவுக்கு அவர் மீது சிஎஸ்கே ரசிகர்கள் அன்பை வைத்திருக்கின்றனர். சென்னை ரசிகர்கள் தாண்டி இந்தியா முழுவதும் பிற மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் தோனிக்கு உள்ளனர்.

அதை எடுத்துக் காட்டும் விதமாக, சிஎஸ்கே அணி விளையாடிய 14 போட்டிகளின் போதும் மைதானங்களில் தோனி ரசிகர்களே அதிக அளவில் நிறைந்திருந்தனர். அதிலும் ரசிகர் கூட்டம் அதிகமில்லாத ஐபிஎல் அணிகளான பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போன்ற அணிகள் ஆடிய போட்டிகளின் போது அரங்கம் நிறைந்திருந்தது. மைதானம் முழுவதும் தோனி ரசிகர்கள் மட்டுமே மஞ்சள் நிற உடை அணிந்து காணப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேசியிருக்கிறார். “சிஎஸ்கே அணிக்கு எதிராக நாங்கள் இரண்டு போட்டிகளில் விளையாடினோம். குறிப்பாக லக்னோவுக்கு அவர்கள் விளையாட வந்திருந்தனர். லக்னோ மைதானத்தில் சுமார் 50,000 இருக்கைகள் இருக்கும். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அன்றைய நாளில் 48,000 ரசிகர்கள் எம்.எஸ்.தோனியின் 7-ம் நம்பர் ஜெர்ஸியுடன் லக்னோவிலிருந்தார்கள். அதை என்னால் நம்பவே முடியவில்லை. பின்னர் நாங்கள் சென்னைக்கு விளையாடச் சென்றோம். அங்கே 98 அல்ல, 100 சதவிகிதம் தோனி ரசிகர்கள் மட்டுமே இருந்தனர்.

ஜஸ்டின் லாங்கர்

இந்தியாவில் தோனியை கடவுள் போல வழிபடுவதை என்னால் நம்பவே முடியவில்லை. இதற்கு முன்பு நான் இந்தியாவில் ஒரு வீரராக விளையாடிய போது, சச்சின் டெண்டுல்கருக்கு அப்படியான  ரசிகர்கள் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். அதன் பின் ஆஸ்திரேலிய அணிக்கு நான் பயிற்சியாளராக இருந்தபோது விராட் கோலி மற்றும் தோனிக்கு அதிக ரசிகர்கள் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்தியாவுக்கு வந்து இதைப் பார்க்கும் போது என்னால் நம்பவே முடியவில்லை. இன்று உலகில் பல கேப்டன்கள் தோனியைப் போல் இருக்க விரும்புகிறார்கள்” என்று ஜஸ்டின் லாங்கர் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.