சர்வதேச டி20 கிரிக்கெட்; முதல் இங்கிலாந்து வீரராக வரலாற்று சாதனை படைத்த பட்லர்

பர்மிங்காம்,

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 84 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 23 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் முடிவில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 84 ரன்கள் குவித்ததின் மூலமாக, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை பட்லர் (3011 ரன்) படைத்துள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் இயான் மோர்கன் (2458 ரன்), அலெக்ஸ் ஹேலஸ் (2074 ரன்), டேவிட் மலான் (1892 ரன்), பேர்ஸ்டோ (1533 ரன்), ஜேசன் ராய் (1522 ரன்) ஆகியோர் உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.