மதுரை: மதுரை வழியாக சென்ற திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், நெல்லை, நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் சென்டரல் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.
இந்நிலையில், இன்டர்சிட்டி ரயில் வழக்கம்போல நேற்று காலை 7.20 மணிக்கு, திருச்சியில் இருந்து புறப்பட்டது. காலை 9.30 மணியளவில் மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தது. மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் ஏறினர். அதன்பின் ரயில் 9.35 மணியளவில் புறப்பட்டு விருதுநகர் நோக்கி சென்றது.
திருமங்கலம் ரயில் நிலையத்தை கடந்து கள்ளிக்குடி ரயில் நிலையத்தின் அருகே சென்றபோது, ரயிலின் பின்பகுதியிலுள்ள பெட்டிகளில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனை கண்டு ரயலில் இருந்த ஊழியர்கள், கள்ளிக்குடி ரயில் நிலையத்திலுள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டு, ரயிலில் புகை வந்தது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள், சோதனை செய்ததில், பிரேக் பிடிப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெட்டியில் இருந்து திடீர் புகை வந்தது என்றும், ரயில்வே ஊழியர்கள் புகையை சரிசெய்து, ரயிலை மீண்டும் இயக்கும் வகையில் வழிவகை செய்தனர்.
சாத்தூர் அருகே சென்றபோதும் , மீண்டும் பின்பக்க ரயில் பெட்டிகளில் இருந்து புகைவந்ததாக தெரிகிறது. ஊழியர்கள் மூலம் மீண்டும் சரி செய்யப்பட்டு, நெல்லை புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக இன்டர்சிட்டி சுமார் 1 மணி நேரம் வரையிலும் தாமதமாக சென்றது. பயணிகள் குறித்த நேரத்திற்கு போகவேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ரயிலின் ஒரு சக்கரத்தில் மட்டும் பிரேக் ஜாம் ஆகி விட்டது. இதனால், அந்த சக்கரம் தண்டவாளத்தில் சுற்றவில்லை. சக்கரம் சுழலாத காரணத்தினால், அது தண்டவாளத்தில் உரசியபடி சென்றுள்ளது. இதனால் பின்பகுதி பெட்டியில் புகை வந்துள்ளது. இதுபோல், பிரச்சினை ஏற்பட்டால், தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு சரி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதன்படி ரயில் சரி செய்யப்பட்டு, இயக்கப்பட்டது. வேறு எந்த பாதிப்பும் கிடையாது. இது போன்ற பிரச்சினை வர வாய்ப்புள்ளது. உடனே சரிசெய்யப்படும்” என்றனர்.