கொல்கத்தா: ரீமல் புயல் தாக்கத்தின் எதிரொலியாக மேற்கு வங்கத்தில் இருவர் உயிரிழந்தனர். அத்துடன், இந்தப் புயலால் கடுமையான பொருட்சேதம், கட்டுமானங்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 30,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக்கடலில் நிலவிய ரீமல் தீவிர புயல், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் – வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே நேற்றிரவு கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால், மேற்கு வங்கத்தில் குறிப்பாக தலைநகர் கொல்கத்தாவில், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புயல் மழையால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கூடவே சிறிய கூரை, தகர வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன.
மத்திய கொல்கத்தாவின் பிபிர் பாகன் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். சுந்தரவனத்தின் மவுசூனி தீவுப் பகுதியில் உள்ள நம்கானாவில் மூதாட்டி ஒருவர் மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததால் உயிரிழந்தார்.
கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளும் இன்று காலை மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தன. செல்டா ரயில் நிலையத்தில் காலை 3 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக சீரமைப்புப் பணிகள் நிறைவுபெற்று போக்குவரத்து தொடங்கியது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் சுமார் 20 மணி நேரம் முடங்கியிருந்த விமானப் போக்குவரத்து பின்னர் இன்று காலை சீரானது.
24 பகுதிகளில் பாதிப்பு: ரீமல் புயல் காரணமாக கொல்கத்தா மாநகராட்சி 79 வார்டுகளுக்கு உள்பட்ட 24 பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 2,140 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 337 மின் கம்பங்கள் விழுந்தன என்று மாநகராட்சி தரப்பு தெரிவித்துள்ளது. முழுமையான சேத விவரத்தை வெளியிட இன்னும் சில நாட்கள் ஆகும். ஒட்டுமொத்த பாதிப்பையும் கணக்கிட வேண்டும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மழை முன்னெச்சரிக்கையாக 2,07.060 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புயல் கரையைக் கடந்துவிட்ட நிலையில் தற்போது நிவாரண முகாம்களில் 77,288 பேர் உள்ளனர். 341 சமையல் கூடங்களில் அவர்களுக்கு உணவு தயாராகிறது. 17,738 தார்ப்பாய்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. காக்த்வீப், நாம்கானா, சாகர் தீவுகள், டைமண்ட் துறைமுகம், ஃபாசர்கஞ்ச், பக்காலி, மண்டார்மணி உள்ளிட்ட பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பான்ர்ஜி புயல் பாதிப்பை ஆய்வு செய்துள்ளார். அது தொடர்பாக அவர் சுந்தரவனப் பகுதிகள் மட்டும் கடலோரப் பகுதிகளில் ரீமல் புயல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து முதல்வர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. தலைமைச் செயலர் பிபி கோபாலிகாவிடம் பேசி புயல் பாதிப்பை சீரமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
புயல் வலுவிழந்தாலும் அதன் தாக்கத்தால் அசாம் மாநிலத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அசாமின் 11 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அசாம், வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. திரிபுராவின் இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று தெற்கு அசாம் மற்றும் மேகாலயாவில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு எல்லை ரயில்வே போக்குவரத்து துறையானது இன்றும், நாளையும் 42 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.