மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்த விசேட மீளாய்வு கலந்துரையாடல் மட்டக்களப்பில் இன்று (27) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் குறித்த விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தை நவீன மயமாக்கல், உலக வங்கி நிதி அனுசர ணையில் உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி பயிர் செய்கை திட்டம், இவற்றின் ஊடாக அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வது போன்ற விடையங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டதுடன், இராஜாங்க அமைச்சரினால் பல்வேறு ஆலோசனைகளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
அத்துடன் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள், ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலாத் தலமாக அடையாளப்படுத்துதல், மாவட்டத்திற்கே ஆன அருங்காட்சியகம் ஒன்றை அமைத்து புராதன விடயங்களை மக்களுக்கு காட்சிப்படுத்தல், மாவட்டத்தின் கைப்பணிப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வர்த்தக மையம் ஒன்றை அமைத்தல், பாரம்பரிய உணவுப் பொருட்களின் விற்பனைக் கூடங்களை அமைத்தல், உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்குதல், சமுர்த்தி நலன்புரித் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன், இராஜாங்க அமைச்சரினால் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்