"`படையப்பா' ரீ-ரிலீஸுக்கு இவங்க எல்லாம் இல்லன்னு நினைக்கிறப்ப…" – தயாரிப்பாளர் தேனப்பன் பேட்டி

‘கில்லி’ ரீ-ரிலீஸ் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை ரீ-ரிலீஸ் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள் தமிழ்த் திரையுலகினர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் மாபெரும் வசூலைக் குவித்த ‘படையப்பா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்வது குறித்து நடிகை ரஜினியை சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார், அப்படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன். ’படையப்பா’ ரீ-ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அவரிடம் பேசினேன்.

”’கில்லி’ ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே ’படையப்பா’ படத்தை ரீ-ரிலீஸ் பண்ணணும்னு திட்டமிட்டிருந்தோம். அதுக்காகத்தான், ’வேட்டையன்’ படபிடிப்புல இருந்த ரஜினி சாரை மீட் பண்ணினேன். ’ரீ-ரிலீஸ் பண்ணினா நல்லா போகுமா’ன்னு கேட்டார் ரஜினி சார். ’சந்தேகமே வேணாம், சூப்பரா போகும் சார்’ன்னு சொன்னேன். ’சரி அப்போ ப்ளான் பண்ணுங்க’ன்னு சொன்னார்.

படையப்பா

ரஜினி சார் எப்பவுமே ஒரே மாதிரிதான். அன்னைக்கு பார்க்கும்போது எப்படி எளிமையா இருந்தாரோ அதேமாதிரி, இப்பவும் எளிமை. அவர்கிட்ட எனக்குப் புடிச்ச விஷயமே அந்த எளிமைதான். நாமல்லாம் அவர்கூட இருந்து கத்துக்கிட்டாகூட வராது, மாறிடுவோம். ஆனா, அவர் எப்போதுமே மாறாதவர். அவர் மனசு எப்பவுமே மாறாது.

யாரா இருந்தாலும் எழுந்து நின்னு வரவேற்கிறது, உபசரிக்கிறதுன்னு எல்லாமே அவர்க்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயங்கள். அந்த எளிமையாலதான் 40 வருடங்களுக்கும் மேலா சூப்பர் ஸ்டாரா இருக்காரு. நான் ‘படையப்பா’ ரீ-ரிலீஸ் பத்தி பேசப்போனப்பவும் ரொம்ப இனிமையா வரவேற்று எளிமையா பழகினார். அந்தச் சந்திப்புல நிறைய விஷயங்கள் பேசினோம்” என்பவர் ரீ-ரிலீஸ் எப்போது ஆகும் என்ற அப்டேட்டையும் பகிர்ந்துகொண்டார்.

”’படையப்பா’ ரிலீஸ் ஆனப்போ, அதுக்கு முன்னாடி மெஹா ஹிட் அடித்து கலெக்‌ஷன் பண்ணின படங்களையே பிரேக் பண்ணிடுச்சு. அதுக்குக் காரணம், ரஜினி சாரோட நடிப்பும் ஸ்டைலும் கே.எஸ் ரவிக்குமாரோட அட்டகாசமான இயக்கமும்தான். இப்போ, ரீ-ரிலீஸ் பண்ணினா 2கே கிட்ஸும் கொண்டாடுவாங்க.

ரஜினி, தயாரிப்பாளர் தேனப்பன்

என்ன… ஒரேயொரு வருத்தம்தான் இருக்கு. ‘படையப்பா’ படத்துல நடிச்ச சிவாஜி சார், மணிவண்ணன் சார், செளந்தர்யா மேடம்ன்னு யாருமே இப்போ உயிரோட இல்ல. அவங்களோட சிறப்பான நடிப்பும் படத்துக்குப் பலம் சேர்த்துச்சு. மூணு பேரோட இழப்பு திரைத்துறைக்கே பேரிழப்பு. அவங்க உயிரோட இருந்தா, ரீ-ரிலீஸ் டைம்ல மக்கள் கொண்டாடுறதைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பாங்க. அதுமட்டும்தான் குறையே தவிர, ‘படையப்பா’ புதுப்படம் மாதிரியே இப்பவும் கலெக்‌ஷனைக் கொடுக்கும். ’கில்லி’ படத்தை விட பெருசா ஹிட் ஆகும், அதுல சந்தேகமே வேணாம். சவுண்ட், பிக்சர்ன்னு இப்போ இருக்கிற டெக்னாலஜிக்கு ஏற்றமாதிரி டிஜிட்டலைஸ் பண்ற வேலைகள் போய்க்கிட்டிருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல, உலகம் முழுக்க ’படையப்பா’வை ரீ-ரிலீஸ் பண்ணப்போறோம்” என்கிறார் உற்சாகமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.