நாடாளுமன்றத் தேர்தல் தனது ஆறு கட்ட வாக்குப்பதிவுகளைக் கடந்து இறுதிக்கட்டத்தில் நிற்கிறது. சரியாக இன்னும் ஒருவாரத்தில் 7-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து, இந்தியாவை மீண்டும் பா.ஜ.க ஆளப்போகிறதா அல்லது இந்தியா கூட்டணி ஆளப்போகிறதா என்கிற முடிவுகளும் தெரிந்துவிடும்.
இப்படியிருக்க, இந்தத் தேர்தல் தொடங்கும் முன்பே தனியாக 370 இடங்கள், கூட்டணியாக 400 இடங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்த பா.ஜ.க, 5-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு அந்தக் கணக்குக்கு ஏற்றவாறு `இப்போதே நாங்கள் 300-ஐ தாண்டிவிட்டோம். இந்த முறையும் நாங்கள் தான்’ என கூறத் தொடங்கியது.
மறுபக்கம், `பா.ஜ.க நிச்சயமாகத் தோற்கும். மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையாகக் கூறிவருகின்றன. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று தங்களின் தோல்விக்கு கார்கேமீது காங்கிரஸ் பழிபோடும் என்றும், அதன் பின்னர் கார்கேவின் பதவி பறிபோகும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது கூறியிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தின் குஷிநகரில் இன்று நடைபெற்ற பிரசாரத்தில் தனது கணிப்பை வெளிப்படுத்திய அமித் ஷா, “முதல் ஐந்து கட்ட வாக்குப்பதிவின் விவரங்கள் என்னிடம் இருக்கின்றன. இதில், பிரதமர் மோடி 310 இடங்களைக் கடந்துவிட்டார். ஜூன் 4-ல் ராகுல் காந்தி 40 இடங்களைக் கூட தாண்ட மாட்டார். அகிலேஷ் யாதவுக்கு 4 இடங்கள் கூட கிடைக்காது.
பின்னர், அன்று மதியம் ராகுல் காந்தியின் ஆட்கள் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து, `மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால்தான் நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்று கூறுவார்கள். மேலும், தோல்விக்கான பழி கார்கேமீது போடுவார்கள். பிறகு அவரின் பதவியும் பறிபோகும்” என்று கூறினார்.