மாங்குளம் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் திறந்துவைப்பு

 

புதிய கட்டட தொகுதியை திறந்துவைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,  பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன் , வினோ நோகராதலிங்கம், இலங்கைக்கான நெதர்லாந்து உயர்ஸ்தானிகர், வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள், வைத்தியசாலையின் ஊழியர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் 4,500 மில்லியன் ரூபா இலகு கடன் வசதியின் கீழ் இந்த மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டட தொகுதியில்,

* செயற்கை அவையங்கள் உற்பத்தி பிரிவு,

* உளநல மேம்பாடுப் பிரிவு,

* பௌதீக புனர்வாழ்வுப் பிரிவு,

* சத்திரசிகிச்சை கூடங்கள்,

* சிறுவர் மற்றும் பெரியோர் இயன் மருத்துவப் பிரிவு.

* கதிரியக்க பிரிவு,

* வெளி நோயாளர் பிரிவு,

* அவசர சிகிச்சை பிரிவு,

* சத்திர சிகிச்சை, பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று விடுதிகள்,

* ஆய்வுக்கூட வசதிகள்,

* தீவிர சிகிச்சைப் பிரிவு,

* நிர்வாக பிரிவு

ஆகிய பிரிவுகள் காணப்படுகின்றன.

இந் நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், “தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஜனாதிபதிக்கு நன்றி. வடக்கு மாகாண சுகாதார துறைக்கு இன்றைய நாள் மற்றுமொரு மைல்கல்லாக  அமைந்துள்ளது. மாங்குளம் வைத்தியசாலையில் இன்று திறக்கப்பட்ட பிரிவிற்கு ஆளணி தேவைப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியபோது, உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பயனாக 81 பேரை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்தது. நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக செயற்பட்ட போது விதைக்கப்பட்ட விதைகளின் பயனை , தற்போது ஜனாதிபதியாக நாட்டை பொறுப்பேற்று மக்களுக்கு பெற்றுக்கொடுக்கின்றார். இவரின் புரட்சிகர பயணத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கான மேலும் பல தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும்.” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.