சிறப்பு விசாரணைக் குழு முன் மே 31-ல் ஆஜராவேன்: பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ பதிவில் தகவல்

பெங்களூரு: பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, வரும் 31-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மே 31-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் இருந்து நீதிமன்றம் மூலம் வெளியே வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது குடும்பத்தினரிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். “எனது வெளிநாட்டுப் பயணம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. ஹசன் தொகுதியில் ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த பிறகு நான் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டேன். பயணத்தின்போதுதான் என் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து எனக்கு தெரிய வந்தது. ராகுல் காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு எதிராகப் பேசத் தொடங்கினர்.

எனக்கு எதிராக ஓர் அரசியல் சதி உருவாக்கப்பட்டது. கடவுள், மக்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும். நான் நிச்சயமாக மே 31-ம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவேன். அதன் பிறகு என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பேன். என் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்டி தேவ கவுடாவின் பேரனும், ஹசன் மக்களவைத் தொகுதியின் எம்பியுமான பிரஜ்வல், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஹசன் தொகுதியில் தேர்தல் நடந்த மறுநாள் (ஏப்ரல் 27) அவர் ஜெர்மனிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும், அவர் எங்கு இருக்கிறார் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் அவர் தலைமறைவாகவே இருக்கிறார்.

பிரஜ்வல் எங்கிருந்தாலும் உடனடியாக இந்தியா திரும்பி விசாரணையை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தேவகவுடா சில நாட்களுக்கு முன் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ வெளியாகி இருக்கிறது.

பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவானதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, தேவ கவுடாவின் உதவியுடனேயே அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகக் குற்றம் சாட்டினார். பிரஜ்வல் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல்களைக் கோரும் ‘ப்ளூ கார்னர் நோட்டீஸ்’ ஏற்கனவே இன்டர்போல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மே 18 அன்று கைது வாரண்ட் பிறப்பித்தது. அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு மத்திய அரசை வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டுகள் என்னென்ன? – முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச‌ வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி வெளியானது. இதையடுத்து, அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார். இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். இதையடுத்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.