நாகர்கோவில்: பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இம்மாதம் 30-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை தியானம் செய்கிறார். இதற்காக கன்னியாகுமரியில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி வருகிற 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். டெல்லியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு அன்று மாலை வருகிறார்.
விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி அன்று மாலையில் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபத்தில் தியானம் செய்கிறார். பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு திங்கள்கிழமை இரவில் இருந்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.