நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிய நாள்முதல் பிரதமர் மோடி, காங்கிரஸையும் இஸ்லாமியர்களையும் ஒன்றாக இணைத்துப் பேசிவருகிறார். பல பிரசார மேடைகளில், காங்கிரஸைப் போலவே இஸ்லாமியர்களையும் ஒரு எதிர்க்கட்சியாக சித்திரிக்கும் அளவுக்கு, இஸ்லாமியர்களை விமர்சித்து வாக்கு சேகரித்தார். `காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக் முத்திரை இருக்கிறது. மக்களின் சொத்துகளைக் காங்கிரஸ் பறித்து ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது. என் தாய்மார்களின் தாலியைக்கூட விட்டுவைக்கமாட்டார்கள்.
எஸ்.சி, எஸ்.டி. ஓ.பி.சி ஆகியோரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுத்திருக்கிறது’ என இந்தத் தேர்தலின் பிரசார மேடைகளில் மோடி முழங்கியிருக்கிறார். மேலும், காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை, இஸ்லாமிய வழக்கங்களில் இளவரசரைக் குறிக்கும் `ஷேஜாதா’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, மேடைதோறும் `காங்கிரஸின் ஷேஜாதா’ என்று மோடி பேசிவருகிறார்.
அந்த வரிசையில் அடுத்ததாகத் தற்போது, இந்தியா கூட்டணி தங்களின் இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக முஜ்ரா நடனமாடுகிறார்கள் என மோடி கூறியிருக்கிறார். கடந்த சனிக்கிழமை பீகாரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மோடி, `இந்தியா கூட்டணி தங்களின் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்துவதற்காக அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் முன் முஜ்ரா நடனம் ஆடுகிறார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளமும், காங்கிரஸும் எஸ்.சி, எஸ்.டி. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டிவிட்டு மதத்தின் அடிப்படையில் தங்கள் வாக்கு வங்கிக்கு இட ஒதுக்கீடு கொடுக்க விரும்புகிறது’ எனக் கூறினார்.
இதில், மோடி குறிப்பிட்ட முஜ்ரா நடனம் என்பது முகலாயர்கள் காலத்தில் தோன்றிய ஒரு வகை நடனம். அப்போதிருந்த ஆட்சியாளர்கள் முன் இரவுப் பொழுதில் அவர்களின் கேளிக்கைக்காக அரண்மனை நடன மங்கைகள் ஆடுவது முஜ்ரா நடனம். முகலாய ஆட்சி நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்றும்கூட நவீன காலத்துக்கேற்றவாறு இந்த முஜ்ரா நடனம் உயிர்ப்போடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படியிருக்க, முகலாய காலத்தில் தோன்றிய நடனத்தை எதிர்க்கட்சிகளோடு தொடர்புபடுத்தி மீண்டும் இஸ்லாமிய மதத்தை முன்வைத்து மோடி பேசியிருப்பதற்கு எதிர்வினைகள் எழத் தொடங்கியிருக்கின்றன.
அதில், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகாரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பேசுகையில், “மோடி பீகாரை அவமதித்துவிட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் இங்கு ஆடப்படுகிறது. எனவே, மோடியின் இத்தகையப் பேச்சு பீகாரையும், அதன் வாக்காளர்களையும் அவமதிக்கும் செயல். மேலும், அவர் எதேச்சதிகாரத்துடன் செயல்படுகிறார். மோடி ஒரு சர்வாதிகாரி. மூன்றாவது முறையாக அவர் மீண்டும் பிரதமரானால், மக்கள் எதையுமே பேச அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்றார்.
அவரைத் தொடர்ந்து AIMIM கட்சியின் தலைவரும், ஹைதராபாத் தொகுதியின் வேட்பாளருமான சிட்டிங் எம்.பி ஒவைசி, “ஒரு பிரதமர் இவ்வாறுதான் பேசுவதா… எங்களிடம் பேச்சுத் திறன் இல்லை என்று மோடி நினைக்கிறாரா… சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் அளவிலான இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. இது தொடர்பாக மோடி எதையும் செய்யவில்லை. நான் கேட்கிறேன் அப்போதெல்லாம் அவர் டிஸ்கோ நடனம் ஆடிக்கொண்டிருந்தாரா… குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களின் உரிமைகளை மறுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில் மோடி பாங்க்ரா நடனம் ஆடிக்கொண்டிருக்கின்றார்.
அதேபோல், இந்து சபைகளில் முஸ்லிம் தாய்மார்கள், சகோதரிகளைப் புண்படுத்தும் அனைத்து விதமான கருத்துகளும் கூறப்படுகின்றன. ஆனால், மோடி இதில் பரதநாட்டியம் ஆடி திருப்தியடைகிறார். இப்போது உயிரியல் ரீதியாகத் தான் பிறக்கவில்லை என்று அவர் கூறிவிட்டதால், இனி `நான் தான் கடவுள், நான் வழிபாட்டுக்குத் தகுதியானவன்’ என்று அவர் சொல்வதே மிச்சம்’ என்று பீகார் பேரணியில் நேற்று விமர்சித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb