முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது: உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத் பேச்சு

கோரக்பூர்(உத்தரப்பிரதேசம்): மத ரீதியில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் பேசிய அவர், “மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. பாபாசாகேப் அம்பேத்கர் இதை கடுமையாக எதிர்த்தார். ஆனால் காங்கிரஸும், இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க போட்டிபோடுகின்றன.

மேற்கு வங்கத்தில், 2010-ல் 118 முஸ்லிம் சாதிகளை ஓபிசி பிரிவில் சேர்த்ததன் மூலம், கடந்த 14 ஆண்டுகளாக ஓபிசியினரின் இடஒதுக்கீட்டு உரிமையை திரிணமூல் காங்கிரஸ் கட்சி முழுமையாக கொள்ளையடித்துள்ளது. மேற்கு வங்க அரசின் இத்தகைய நடவடிக்கையை கடுமையாக சாடிய கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

திரிணாமுல் காங்கிரஸின் செயல் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. 2010-க்குப் பிறகு மேற்கு வங்கத்தில் வழங்கப்பட்ட அனைத்து OBC சான்றிதழ்களையும் ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு நன்றி.

இதேபோல், பிஹாரிலும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே கூறியிருக்கிறார். இவர்கள் இந்த இடஒதுக்கீட்டை எங்கிருந்து பெறுவார்கள்? எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கவே அவர்கள் விரும்புகிறார்கள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க, எந்த விதமான முஸ்லிம் இடஒதுக்கீட்டையும் பாஜக எதிர்க்கிறது. முஸ்லிம் இடஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இதுபோன்ற தீய நடைமுறைகளைத் திணிக்க முயற்சித்தால், நாட்டின் ஒருமைப்பாடு பாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு இஸ்லாமிய பிரிவினரை ஓபிசி பட்டியலில் சேர்த்த மேற்கு வங்க அரசின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது கடந்த 22ம் தேதி தீர்ப்பளித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், “2010 க்கு முன்பு OBC பட்டியலில் சேர்க்கப்பட்ட நபர்கள் தங்கள் அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள், அதே நேரத்தில் 2010 க்குப் பிறகு செய்யப்பட்ட பரிந்துரைகள் ரத்து செய்யப்படும். 1993 சட்டத்தின்படி OBC களின் புதிய பட்டியலை மேற்கு வங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரிக்க வேண்டும்” என தீர்ப்பளித்தது.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், அம்மாநிலத்தில் சுமார் ஐந்து லட்சம் ஓபிசி சான்றிதழ்கள் செல்லாததாக ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், “OBC ஒதுக்கீட்டின் கீழ் வேலைகளைப் பெற்ற அல்லது அவற்றைப் பெறுவதற்கான செயல்பாட்டில் உள்ள நபர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் ஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்பட முடியாது” என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-க்குப் பிறகு மேற்கு வங்கத்தில் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்களை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்த சில மணி நேரங்களில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்க மாட்டோம். ஓபிசி இடஒதுக்கீடு தொடரும்… தொடரும்…” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.