நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் நேற்று (மே 27) கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.
கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 20 மாவட்டங்களில் உள்ள 212 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் 55406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் வானிலை அவதான நிலைய தகவல்களின் அடிப்படையில், தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் எனவும் இராஜங்க அமைச்சர் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களும், குறிப்பாக முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணியாளர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, கொழும்பில் உள்ள அதிக ஆபத்துள்ள மரங்களை அகற்றும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, முப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கொழும்பு மாநகர சபையின் உதவியுடன் ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அகற்றப்படும் மரங்களுக்கு மாற்றாக வீதிகள் மற்றும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொருத்தமான மரங்களை தேர்வு செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
மேலும், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் விழுந்த மரங்களின் வேர்களை விஞ்ஞான ரீதியாக பரிசோதனை செய்வதற்கு தேவையான உபகரணங்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கேகாலை மாவட்டத்தின் கீழ் கடுகண்ணாவ பிரதேசத்தில் பாறைகள் விழும் அபாயம் உள்ள பல ஆபத்தான இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் அங்குள்ள ஆபத்தான பாறைகளை மக்களுக்கு இடையூறு அற்ற வகையில் அகற்றுவதற்கு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் தென்னகோன் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ள “சுரக்கிமு” என்ற விசேட தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு, உள்ளூராட்சி மன்றங்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்படும் சரியான தகவல்களை மாத்திரம் மக்களுக்கு வழங்குமாறும் அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.