புதுடெல்லி: ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. உலக நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு அந்தஸ்து கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். பெரும்பாலான உலக நாடுகள் இத்தனை காலம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமலேயே இருந்தது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் இடையே காசாவில் போர் ஏற்படத் தொடங்கிய பிறகு நிலைமை மாற தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு 2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காசா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 2023 அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 36,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 81,026 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது, மேலும், பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தொலைக்காட்சி உரை ஒன்றில், “இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். இதன் இலக்கு ஒன்றே ஒன்றுதான். இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்த இலக்காகும்” என்று கூறினார்.
அதுபோல் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார், “தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை பாலஸ்தீனத்துக்கு உள்ளது” என்று தெரிவித்தார். அதோடு, நார்வே வெளியுறவு அமைச்சர், பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபாவிடம் ஆவணங்களை இன்று ஒப்படைத்தார்.
அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் இது குறித்து, “அயர்லாந்தின் இந்த முடிவு நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பது பற்றியது. காசாவில் நாம் காணும் மனிதாபிமான பேரழிவை நிறுத்துமாறு மீண்டும் இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவை கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார். செவ்வாய்கிழமை காலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவை எடுத்தாலும், பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் இது சரியான நேரமாக இருக்காது எனத் தெரிவித்துள்ளன. உலக நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.