விதிமுறைகளை மீறியதாக 72 பட்டாசு ஆலை உரிமங்கள் தற்காலிக ரத்து @ விருதுநகர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 72 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் 802 பட்டாசு ஆலைகள், மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் 36 பட்டாசு ஆலைககள் என மொத்தம் 1,098 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் வெடி விபத்துகளைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆலைகளில் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்துவது, பயிற்சி இல்லாத நபர்களை பணிக்கு அமர்த்துவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் வெடி பொருள்களை கையாள்வது, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பட்டாசு தயாரிப்பது, தடை செய்யப்பட்ட பேரியம் உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்துவது, பட்டாசு ஆலையை சட்ட விரோதமாக உள் குத்தகைக்கு விடுவது, குடோன்களில் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை இருப்பு வைப்பது, வீடுகள், காட்டுப் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுபோன்று விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை பட்டாசு ஆலைகளில் வருவாய்த் துறையினரால் நடத்தப்பட்ட ஆய்வில், நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதிபெற்று இயங்கிய 33 ஆலைகள், மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கிய 39 ஆலைகள் என மொத்தம் 72 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் இதுவரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகள் மீதான ஆய்வு நடவடிக்கை தொடரும் என்றும், பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால் ஆலையின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் நடவடிக்கை தொடரும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.