நாகர்கோவில்: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி தியானத்தை ரத்து செய்யக் கோரி குமரி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி நாளை (மே 30) முதல் 3 நாட்கள் தியானம் செய்யவுள்ள நிலையில், திமுக குமரி மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தலைமையில் புதன்கிழமை மாலை கட்சியின் வழக்கறிஞர் அணியினர், குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீதரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி மே 30-ம் தேதி முதல் பாஜக வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கில் வாக்காளர்களை கவர்வதற்காக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்து விளம்பரப்படுத்த அனுமதித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
மேலும், இதுபோன்ற தேவையற்ற விளம்பரத்தால் பொதுமக்களுக்கும், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. குறிபபாக கோடை விடுமுறை நேரத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளிக்கும்.
பிரதமரின் வருகையால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து கெடுபிடுகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பிரதமர் மோடிக்கு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ள வழங்கியிருக்கும் அனுமதியை தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.