Doctor Vikatan: லேட்டாக தூங்கச் சென்றாலும் அதிகாலையிலேயே விழிப்பு வருவது ஏன்?

Doctor Vikatan: இரவு தாமதமாக தூங்கச் சென்றாலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிடுகிறது. பிறகு தூங்க முடிவதில்லை. ஆனால், அலுவலகம் வந்ததும் தூக்கம் வருகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்… இதைத் தவிர்ப்பது எப்படி?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார்.

பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார்.

நம் ஒவ்வொருவரின் உடலிலும் உயிரியல் கடிகாரம்  ( Biological clock ) என ஒன்று இருக்கும்.  நம் உடலின் சர்கேடியன் ரிதத்தை (Circadian Rhythm)  இந்த உயிரியல் கடிகாரம்தான் கட்டுப்படுத்துகிறது. உடல் ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக நம் உடலில் நிகழ்கிற அனைத்து மாற்றங்களும் ஒரு ரிதம்போல இயங்குவதுதான் சர்கேடியன் ரிதம்.

இந்த சர்கேடியன் ரிதம் மாறுபடும்போது நமது தூக்க சுழற்சியும் பாதிக்கப்படும். உங்கள் விஷயத்தில் உங்களுடைய உடலியல் கடிகாரமானது பல வருடங்களாக ஒரே மாதிரி இயங்கிப் பழகியிருக்கும். அதாவது நீங்கள் எத்தனை மணிக்குத் தூங்கச் செல்கிறீர்கள் என்பதையும், எத்தனை மணிக்கு தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறீர்கள் என்பதையும் உங்கள் உடலியல் கடிகாரம் பதிவு செய்யும். அதனால் நீங்கள் தாமதமாகத் தூங்கச் சென்றாலும், நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் நேரமானது உடலியல் கடிகாரத்தால் பதிவுசெய்யப்பட்டு இருப்பதால், அந்த நேரத்துக்கு உங்களுக்கு விழிப்பு வந்து எழுந்து கொள்வீர்கள். 

உடலியல் கடிகாரத்தை ஒழுங்காக இயங்கச் செய்வது நம் கைகளில்தான் உள்ளது.  அந்த வகையில் நமது தூக்க சுழற்சியானது நம்மால்தான் முறைப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியமானது. எத்தனை மணிக்குத் தூங்கி, எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதை நம் மூளைக்குப் பழக்கிவிட்டால், உடலியல் கடிகாரம் அதைப் பதிவு செய்து அதற்கேற்ப இயங்கும்.  

பணியிடத்தில் தூக்கம்

முந்தைய இரவு சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் ‘ஸ்லீப் ஹேங் ஓவர்’ (sleep hangover) ஏற்பட்டு, அடுத்த நாள் அலுவலகத்தில் உங்கள் வேலைகள் பாதிக்கப்படும். பகலில் சோர்வாக, மந்தமாக உணர்வீர்கள். தூக்கமும் வரும். அதைத் தாண்டி உங்கள் வேலையின் இயல்பும் உங்கள் மனநிலைக்கு காரணமாகலாம். பிடிக்காத, போரடிக்கிற வேலைச்சூழலும் இப்படி உங்களை உணரச் செய்யலாம். 

படபடப்பு, மனப் பதற்றம் போன்றவை இருக்கும்போதும் நம் தூக்க சுழற்சியானது பாதிக்கப்படும். நல்ல தூக்கத்துக்கு மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்க வேண்டியது மிக முக்கியம். அதற்கு ‘டார்க்னெஸ் ஹார்மோன்’ ( Darkness Hormone) என்றே பெயர். அறை வெளிச்சம், செல்போன், லேப்டாப், டிவி திரைகளில் இருந்து வெளிப்படும் ஒளி போன்றவற்றாலும் இந்த மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்பட்டு, தூக்கமும் பாதிக்கப்படும்.  வழக்கமாக எடுத்துக்கொள்கிற மருந்துகளை தூங்கச் செல்லும் போது எடுத்துக்கொள்ளாமல், முன்கூட்டியே எடுத்துக்கொள்ளலாம். மாலை நேரத்தில் மிகவும் தீவிரமான உடற்பயிற்சிகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.  கஃபைன் அதிகமுள்ள காபி, டீ போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். தூங்கும் அறையானது ரம்மியமாக, அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.