இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பவாத் சவுத்ரி விருப்பம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அடிக்கடி வாழ்த்து தெரிவித்து வருபவர் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பவாத் சவுத்ரி. இந்நிலையில் அவர் இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது:
தற்போது இந்தியாவில் நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்க வேண்டும். பிரதமர் மோடியைத் தோற்கடிக்க ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இந்தியா, பாகிஸ்தானில் தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டுமானால் இந்தியாவும், பாகிஸ்தானும் நெருங்கி வரவேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் மோடி தோல்வியுற வேண்டும்.
பாகிஸ்தானில் இந்தியா மீது வெறுப்பு எதுவும் கிடையாது. ஆனால் பாஜக-ஆர்எஸ்எஸ் கொள்கைகள் பாகிஸ்தான் மீது வெறுப்பைத் தூவுகின்றன. இந்தியாவிலுள்ள வாக்காளர்கள் முட்டாள்கள் அல்ல. முன்னேறிய, வளர்ச்சி பெற்ற நாடாக இந்துஸ்தானம் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம்.
மோடியைத் தோற்கடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாழ்த்துகள். அது ராகுல் காந்தியோ அல்லது அர்விந்த் கேஜ்ரிவாலோ அல்லது மம்தா பானர்ஜியோ.. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு பவாத் சவுத்ரி தெரிவித்தார்.