தேங்காய் விவசாயிகள் தென்னை மரம் வளர்ப்பதை விட அதில் இருந்து தேங்காய் பறிப்பதில்தான் அதிக சிரமத்தை எதிர்கொள்கின்றனர். சிலர் தேங்காய் பறிப்பதற்கு பதில் தானாக விழும் தேங்காய்களை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர். ஒரு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க தொழிலாளர்கள் கணிசமான தொகை கேட்கின்றனர். அப்படி கொடுத்தாலும் சில நேரங்களில் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கோவாவில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவா பல்கலைக்கழகமும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் மத்திய கடற்கரையோர விவசாய ஆராய்ச்சி நிலையமும் சேர்ந்து இந்த புதிய கருவியை கண்டுபிடித்து இருக்கிறது. இக்கருவியை பயன்படுத்தி தேங்காய்களை தானாக பறிக்க முடியும். கோகோபோட் என்று பெயரிடப்பட்டுள்ள அக்கருவியை பயன்படுத்தி விரைவாகவும், பாதுகாப்பாகவும் தேங்காய் பறிக்க முடியும்.
ஆள்களை பயன்படுத்தி தேங்காய் பறிப்பதை குறைக்கும் நோக்கில் கோவா பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் ராஜேந்திராவும், மத்திய கடற்கரை வேளாண் ஆராய்ச்சி நிலைய ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆர்.தேசாய் ஆகியோர் இணைந்து இக்கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். இக்கருவியை கொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் தரையில் இருந்து கொண்டு தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க முடியும்.
இக்கருவியில் ரோபோட்டில் இருப்பது போன்று கை இருக்கும். அதோடு கேமராவும் இருக்கும். கேமரா உதவியுடன் தேங்காய் எங்கிருக்கிறது என்பதை பார்த்து பறிக்க முடியும். அதோடு கீழே இருந்து கொண்டு தேங்காய் பறிப்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மரத்தில் இருந்து சற்றி தள்ளி நின்று கொண்டு தேங்காயை பறிக்க முடியும். இதனை வடிவமைத்த விஞ்ஞானி தேசாய் இது குறித்து கூறுகையில்,”நாங்கள் கண்டுபிடித்திருக்கும் தானியங்கி தேங்காய் பறிக்கும் கருவி முழுமையாக விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இக்கருவிகளை அதிக அளவில் தயாரிக்க தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுடைய கருவிக்கு காப்புரிமை கேட்டு 2017-ம் ஆண்டே விண்ணப்பித்தோம். கோகோபோட் கருவி மூலம் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சம் 15 மரங்களில் தேங்காய் பறிக்க முடியும். இதில் சிறிய மாற்றம் செய்து பிற விவசாய பொருள்களையும் அறுவடை செய்ய முடியும்.
இப்போது கோகோபோட்டிற்கு காப்புரிமை கிடைத்திருக்கிறது. கோகோபோட் வெற்றியை தொடர்ந்து அதனை மேம்படுத்தி பறக்கும் கோகோபோட் உருவாக்கி இருக்கிறோம். ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்பு எதிர்கால விவசாய தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.