இன்றைய காலச்சூழலில், சொந்த வீடு என்பது ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமின்றி, நடுத்தர மக்களிலும் பெரும்பாலோருக்கு நிறைவேறாத கனவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும்கூட கோடிக்கணக்கான மக்கள் சொந்த வீடின்றி, வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள். அவர்களின் வருமானத்தில் கணிசமான பகுதி வாடகைக்கே போய்விடுகிறது.

இந்தச் சூழலில்தான், ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு ரூ.2,77,290 லட்சம் மத்திய அரசு வழங்குகிறது, 62 சதவிகிதம் தமிழக அரசு பணம் வழங்குகிறது.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள். இதுவரை ஏழு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஞ்சாயத்தில் சில அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். கும்மிடிப்பூண்டி பஞ்சாயத்திலுள்ள சனபத்தூர் கிராமத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.31.66 லட்சம் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே சொந்த வீடு வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டதின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள். ஆனால், சொந்த வீடு வைத்திருக்கும் பலருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன.

இதில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருக்கிறது. அதாவது, 146 பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஒரு கோடி ரூபாயில் அதிகாரிகள் முறைகேடு செய்திருக்கிறார்கள். அங்கு, 10 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் பஞ்சாயத்து செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள்… அவர்கள் மீது மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
இந்த முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. லால்குடி ஒன்றியம் மருதூர் கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் விதிகளை மீறி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகள்ஒதுக்கப்பட்டிருப்பதாக, திருச்சியைச் சேர்ந்த உதயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இறந்தவர் உயிருடன் இருப்பதுபோல போலி அடையாள அட்டை தயாரித்து, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமாறு அவர் கோரியிருந்தார்.
இது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடந்த நவம்பர் மாதம் விசாரித்தனர். அப்போது, ‘பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஏழைகளுக்குப் பயனளிக்கும் திட்டம். இந்தத் திட்டத்தின் நோக்கம் சிதைக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்த பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர், தனது பணியைச் சரியாக மேற்கொள்ளவில்லை. கடைநிலை ஊழியர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது. உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ நீதிபதிகள் கறார் காட்டினர். ஆனாலும், இதுவரை உயர் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் யார் மீதும் வழக்குப் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88