வடக்குப் புகையிரதப் பாதையில் அபிவிருத்தி செயற்பாடுகள் மேலும் இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்றும் அதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக பொசன் பௌரணமி தினத்தில் விசேட பஸ் போக்குவரத்து சேவையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், போசொன் போயாவை முன்னிட்டு புகையிரதத்தில் பயணிக்கும் பிரயாணிகளை விட அதிகமானளவில் பயணிக்கக்கூடியதாக இந்த பஸ் சேவையைப் அமுல்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி பொசோன் போயா தினம் மற்றும் முந்திய, மறுநாள் என சில நாட்கள் இந்த பஸ் சேவை நடைமுறைப்படுத்தப் படவுள்ளது.
வடக்குப் புகையிரதப் பாதை அபிவிருத்தித் திட்டத்திற்காக முதலீட்டில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள து. பிரித்தானிய ஆட்சிக் காலத்தின் பின்னர் முதல் தடவையாக அனுராதபுரம் முதல் ஓமந்தை வரை வடக்கு புகையிரதப் பாதை முழுமையாக நவீனமயப்படுத்தப்பட்டு நிறைவுக்கட்டத்திற்கு வந்துள்ளது.
மஹவ முதல் அனுராதபுரம் வரையான பகுதியில் நவீன மயப்படுத்தல் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பொசோன் போயாவிற்கு முன்னர் அப்பகுதியைத் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும், மழை, காலநிலை மாற்றம் மற்றும் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியேற்பட்டதால் அது மேலும் 02 மாதங்கள் தாமதிக்கும் என பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரை பயணிப்பதற்கு எடுக்கும் காலத்தை ஐந்தரை மணித்தியாலம் வரை குறைக்க முடிந்துள்ளது.
அதன்படி வடக்குப் புகையிரத்தப் பாதை இலங்கையில் உள்ள புகையிரதப் பாதைகளில் முழுமை யாக நவீன மயப்படுத்தப்பட்டு நிறைவுபெற்று, எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் வரை மீள் புனரமைப்பு அவசியமற்ற புகையிரதப் பாதையாகக் காணப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.