இந்தியா – பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல் – களத்தில் சிஐஏ

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜூன் 9 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி நாசாவ் கவுண்டியில் உள்ள ஐசன்ஹோவர் பார்க் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இப்போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் மைதானம் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் துளியும் பயமில்லாமல் மைதானத்துக்கு வரலாம், இப்போட்டி நடைபெறும் மைதானம் அமைந்திருக்கும் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நியூயார்க் மாநில ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துக்கின்றன. ஜூன் 1 ஆம் தேதி முதல் கிரிக்கெட் உலகின் உட்சபட்ச போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இந்தியா ஜூன் 5 ஆம் தேதி முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. அன்று அயர்லாந்து அணிக்கு எதிராக உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா படை தொடங்க இருக்கிறது. இதனையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்திருக்கும் கிரிக்கெட் கிரவுண்டுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

ஆனால், இப்போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதமே ஐஎஸ்ஐஎஸ்-கே இந்த அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாகவே டி20 உலக கோப்பைக்கு இந்த அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டிருப்பதால், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்காவில் போட்டி நடக்கும் பகுதி ஆளுநர்கள் கவனித்து வருகின்றனர். எப்பிஐ மற்றும் சிஐஏ அதிகாரிகளும் டி20 உலக கோப்பைக்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Nassau County நிர்வாகி புரூஸ் பிளேக்மேன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசுகையில், இந்தியா  – பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டி நடைபெறும் மைதானத்திற்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு அச்சுறுத்தலையும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். ஸ்டேடியமும் அதைச் சுற்றியுள்ள ஐசனோவர் பூங்காவும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துள்ளோம் என்றும் பிளேக்மேன் கூறினார்.

இதேபோல் டிரினிடாட் பிரதமரும் டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் வந்திருப்பதை உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் இந்த தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஐசிசியும் டி20 உலக கோப்பை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.