சென்னை: செல்போனுக்காக நடந்த கொலை – 24 மணி நேரத்துக்குள் சிறுவன் உட்பட 3 பேர் கைது!

சென்னை, குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை செய்துவந்தவர் ராஜேஷ் (30). சம்பவத்தன்று இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே தனியாக நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் ராஜேஷிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர்களிடம் பணமில்லை என ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், ராஜேஷைக் கத்தியால் வெட்டிவிட்டு செல்போனைப் பறித்துச் கொண்டு தப்பிச் சென்றது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ராஜேஷை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கைது

இது குறித்து ராஜேஷின் அப்பா ஆறுமுகம், குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவுசெய்து விசாரித்தார். இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க துணை கமிஷனர் பவன்குமார் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் வெங்கட்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், நமச்சிவாயம், காவலர்கள் பார்த்திபன், நரேஷ்குமார், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கொலையாளிகளைத் தேடி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் செல்போன் சிக்னல்களை போலீஸார் ஆய்வு செய்தனர். தனிப்படை போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் விஜய், திருமலை, 13 வயது சிறுவன் ஆகிய மூன்று பேர் சிக்கினர்.

அவர்களிடம் விசாரித்தபோது சம்பவத்தன்று இரவு இவர்கள் ஏரிக்கரை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அவ்வழியாக செல்போனில் பேசியபடி ராஜேஷ் வந்திருக்கிறார். அப்போது நடந்த தகராறில் ராஜேஷை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் மற்ற இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலும் போலீஸார் அடைத்துள்ளனர். கொலை நடந்த 24 மணி நேரத்துக்குள் தனிப்படை போலீஸார், கொலையாளிகளைக் கைதுசெய்ததையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் அவர்களைப் பாராட்டினர்.

ராஜேஷ்

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், “தந்தையின் கடனை அடைக்கத்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் ராஜேஷ் இந்த செங்கல் சூளைக்கு வந்தார். அவர் பணியில் சேர்ந்த சில தினங்களிலேயே இப்படியொரு கொடுமை நடந்திருக்கிறது. ராஜேஷை இழந்த அவரின் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த பகுதி இருட்டான இடம் என்பதால், எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும் எங்களின் புலன் விசாரணையில் கொலையாளிகளைப் பிடித்துவிட்டோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.