'மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி' – ராமதாஸ்

விழுப்புரம்,

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“மக்களவைத் தேர்தல் முடிவுக்கு வருகிறது. ஜூன் 4-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்போது மத்தியில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி செய்யப்படும். பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 400-க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா, பா.ம.க கூட்டணி 20-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். மத்தியில் மோடி ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு, தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடமிருந்து போராடிப் பெறுவோம். தமிழகம் முன்னேற பாடுபடுவோம் .

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாகவுள்ள மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் எனவும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 27,858 பேருக்கு மட்டும்தான் தேர்வாணையம் மூலம் வேலை வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கும் கூடுதலாக ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் கணக்கில் சேர்த்தால் குறைந்தது 6 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். தி.மு.க. அரசின் பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்குள்ளாக 6 லட்சம் பேருக்கு அரசு வேலை எப்படி வழங்கப்படும் என்பதை தி.மு.க. அரசு தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சாதி சான்று, வருவாய் சான்று உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது 16 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை ஊழியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது ஆனால், போதுமானதல்ல.

இதையே சேவை பெறும் உரிமைச் சட்டமாக இயற்ற வேண்டும். சட்டமாக இயற்றப்பட்டால், பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அரசு வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தவுள்ளது.

கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்வதில் எந்த தவறும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகளுக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை. தியானம் மேற்கொள்வது ஒவ்வொரு தனி நபரின் உரிமை அந்த உரிமை பிரதமருக்கும் உண்டு. இதை தேர்தல் பரப்புரையாக கருத முடியாது. கடந்த 2019 தேர்தலின்போதும் இறுதி கட்ட தேர்தலின்போது உத்தரகாண்ட் பகுதி இமயமலையில் உள்ள கேதார்நாத்தில் தியானம் செய்தார் அப்போது எதுவும் பேசாத எதிர்கட்சிகள் தற்போது விமர்சிப்பது காரணம் தோல்வி பயம்தான் .

பிரதமர் மோடி தமிழர்களை எந்த வகையிலும் அவமதிக்கவில்லை. ஒடிசாவில் பிரசாரம் செய்தபோது அம்மாநிலத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அதிகாரியை மறைமுகமாக குறிப்பிட்டு சில குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். தனிநபரை பற்றி கூறிய கருத்து எப்படி ஒட்டுமொத்த தமிழர்களின் அவமதிப்பு செய்வதாகும். அரசியல் செய்யவே தி.மு.க. இப்படி குற்றச்சாட்டு கூறுகிறது.”

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.