சென்னை: தென் தமிழகம், கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மூலம் அதிக மழை கிடைத்து வருகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் தென்மேற்குப் பருவமழை காலமாக இந்திய வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது.
இந்த ஆண்டு அந்தமானில் கடந்த 19-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும், வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரசேதம் ஆகிய இடங்களில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வழக்கத்தைவிட அதிக மழை: இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாகவே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தமிழகத்தில் மழைவாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களிலும், ஜூன் 1, 2, 3-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3-ம் தேதி கனமழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளையில் 4 செமீ, கோவை மாவட்டம் வால்பாறை, தேயிலை அறிவியல் துறை ஆகிய இடங்களில் தலா 3 செமீ,கோவை மாவட்டம் சின்கோனா, சோலையார் ஆகிய இடங்களில் தலா 2 செமீ,கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர்,மாம்பழத்துறையாறு, கோழிப்போர்விளை, அணைகெடங்கு, சின்னக்கல்லார், சுருளக்கோடு, குளச்சல், இரணியல், தக்கலை, அடையாமடை, முக்கடல் அணை ஆகிய இடங்களில் தலா 1 செமீமழை பதிவாகியுள்ளது.
சென்னையில் வெப்பம் நீடிக்கும்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் நேற்று 18 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவாகியுள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 108 டிகிரி பதிவாகியுள்ளது. மேலும், சென்னை மீனம்பாக்கம், வேலூரில் தலா 107 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, நாகப்பட்டினம், கடலூர், ஈரோடு ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, தொண்டி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, கரூர் பரமத்தி, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.