ராம்பூர்: உத்தர பிரதேசம் துங்கர்பூர் பகுதியில் வசித்து வந்த வீட்டு உரிமையாளர் அப்ரார், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி போலீஸில் ஒரு புகார் அளித்தார்.
அலே ஹாசன் மற்றும் ஒப்பந்ததாரர் பர்கத் அலி ஆகிய இருவர் தனது வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கிவிட்டு, வீட்டைக் கொள்ளையடித்ததாக அந்தப் புகாரில் கூறியிருந்தார். மேலும் தன்னை கொலை செய்யவும், தனது வீட்டை முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கவும் அவர்கள் முயன்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்துக்குப் பின்னால் சமாஜ்வாதி கட்சி எம்.பி. முகமது ஆசம் கான் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் முகமது ஆசம் கான் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் ராம்பூரில் உள்ள எம்பி-எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.