India National Cricket Team: ஐபிஎல் 2024 தொடர் நிறைவடைந்து ஐந்து நாள்கள் ஆகிவிட்டது. கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த ஒரு வாரம் காலம் ஓய்வு எனலாம். ஆம், வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 9வது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) நடைபெற இருக்கிறது.
இதற்காக இந்திய அணி (Team India) உள்பட 20 அணிகள் தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று வருகின்றன. டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்க விழா இந்திய நேரப்படி ஜூன் 2ஆம் தேதி நள்ளிரவில் நடைபெறும் எனலாம். ஐபிஎல் முடிந்த உடன் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்கான தயாரிப்பில் இறங்கிவிட்டனர். சுமார் 1 வார காலமே இரு தொடர்களுக்கும் இடைவெளி இருந்ததும் இங்கு கவனித்தக்கது.
பயிற்சி ஆட்டம்
இந்திய அணி தனது பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை நாளை எதிர்கொள்கிறது. தொடர்ந்து, குரூப் சுற்று போட்டிகளும் தொடங்க உள்ள நிலையில், ஜூன் 5ஆம் தேதியே இந்தியா – அயர்லாந்து (India vs Ireland) போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அடுத்து ஜூன் 9ஆம் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது. தொடர்ந்து, ஜூன் 12ஆம் தேதி அமெரிக்கா உடனும், ஜூன் 15ஆம் தேதி கனடா அணியுடனும் இந்தியா மோத உள்ளது. இந்த குரூப் சுற்று போட்டிகள் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்தால் மட்டுமே அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதிபெறும்.
இந்திய அணி 2007ஆம் ஆண்டுக்கு பின் டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. எனவே, இந்த முறை ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி எப்படியாவது கோப்பையை தட்டித்தூக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. விராட் கோலி (Virat Kohli), ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப், பும்ரா ஆகியோர் மீண்டும் டி20 உலகக் கோப்பையில் கலக்க காத்திருக்கின்றனர்.
பிளேயிங் லெவனில் யார் யார்?
இருப்பினும், ஜெய்ஸ்வால், தூபே, சஞ்சு சாம்சன், சஹால் ஆகியோர் தங்களின் முதல் டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்ளவும் காத்திருக்கின்றனர். எனவே, எந்தெந்த வீரர்களை இந்திய அணி பிளேயிங் லெவனில் (Team India Playing Xi) முயற்சிக்க உள்ளது என்பது பெரிய கேள்வியாக உள்ளது. ரோஹித் நிச்சயம் ஓப்பனராக இறங்குவார், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட இருப்பதால் மிடில் ஆர்டரில் பேட்டிங்கும், 4 ஓவர் பௌலிங்கும் அவரிடம் இருந்து நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
மறுபுறம், குரூப் சுற்று போட்டிகளில் முதல் மூன்று போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற இருக்கிறது. அதில் நேர் எதிர் பவுண்டரிகள் அனைத்தும் 55 மீட்டர்களே உள்ளன. எனவே, ஸ்பின்னர்களை அங்கு அதிகமாக பயன்படுத்துவது கடினம். சூப்பர் 8 போட்டிகள் அனைத்தும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருக்கிறது என்பதால், அங்குதான் ஸ்பின்னர்களின் தேவை அதிகமாகும். எனவே, நியூயார்க்கில் நடைபெறும் போட்டிகளில் ஜடேஜாவை மட்டுமே இந்தியா பயன்படுத்தும் என கூறப்படுகிறது.
அதன்படி பார்த்தால், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் பந்துவீச சிராஜ், அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகிய நான்கு வேகப்பந்துவீச்சாளர்களையும் இந்தியா பயன்படுத்தும். பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ரோஹித் இறங்கினால் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் (அல்லது) தூபே, ரிஷப் பண்ட் ஆகியோர் என பேட்டிங் டெப்த் 8ஆவது வீரர் வரை இருக்கும்.
பவுலிங் ஆப்ஷனில் அக்சரும், தூபேவும் பந்துவீசினால் 6 பேர் கிடைப்பார்கள். எனவே, இதுவே ஆரம்ப கட்டத்தில் பிளேயிங் லெவனாக இருக்கலாம். இல்லையெனில் அக்சர் (அல்லது) தூபே ஆகியோருக்கு பதில் ஒரு சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் ஆரம்ப கட்ட போட்டிகளில் குல்தீப் – சஹால் ஆகியோர் இணைந்து விளையாட வாய்ப்பே இல்லை எனலாம்.
பிளேயிங் லெவன் கணிப்பு
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் படேல் (அ) தூபே (அ) குல்தீப், அர்ஷ்தீப், பும்ரா, சிராஜ்