“சிறைக்கு திரும்புகிறேன்; என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்” – கேஜ்ரிவால் உருக்கம்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது. இந்நிலையில், மீண்டும் சிறைக்கு திரும்புவது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

“தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள 21 நாட்கள் எனக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி நாளை மறுநாள் (ஜூன் 2) நான் மீண்டும் திஹார் சிறைக்கு திரும்புகிறேன். இந்த முறை என்னை எத்தனை நாள் சிறையில் வைக்க உள்ளார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், மனதளவில் நான் தெளிவாக உள்ளேன்.

சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து நாட்டைக் காக்க நான் சிறை செல்வதில் பெருமை கொள்கிறேன். என்னை வீழ்த்த முயன்று வீழ்ந்தது அவர்கள் தான். நான் சிறையில் இருந்தபோது பல்வேறு வகையில் என்னை சித்ரவதை செய்தனர். எனக்கான மருந்துகளை நிறுத்தினர். அவர்களுக்கு என்ன வேண்டும், ஏன் இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.

சிறையில் இருந்தபோது 70 கிலோ எடை இருந்தேன். இப்போது 64 கிலோ உள்ளேன். சிறையில் இருந்து வந்த பிறகும் உடல் எடை கூடவில்லை. தீவிர நோய் பாதிப்பின் அறிகுறியாக கூட இது இருக்கலாம் என மருத்துவர்கள் சொல்கின்றனர். நிறைய மருத்துவ சோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

நான் எனது வீட்டில் இருந்து மதியம் மூன்று மணி அளவில் சிறைக்கு சென்று, சரணடைய உள்ளேன். இந்த முறை என்னை கூடுதலாக வதை செய்வார்கள். ஆனால், எதற்கும் நான் வளைந்து கொடுக்க மாட்டேன். நான் சிறையில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் உங்களுக்கான இலவச மின்சாரம், மருத்துவம் உட்பட அனைத்தும் தொடரும்.

நான் வெளிவந்தவுடன் மாதந்தோறும் ரூ.1,000 மகளிருக்கு வழங்க உள்ளேன். எனது குடும்பத்துக்காக இன்று நான் உங்களிடம் ஒன்றே ஒன்று மட்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். எனது பெற்றோர் மிகவும் வயதானவர்கள். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் குறித்து சிறையில் எண்ணி எண்ணி நான் வருந்துகிறேன். எனக்கு பதிலாக எனது குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்” என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. விசாரணைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவால் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 10–ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 2-ம் அவர் சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.