வேலூர், காட்பாடியிலுள்ள தனது வீட்டில் தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசும்போது, “இந்தத் தேர்தலில் பிரதமர் மோடியின் பேச்சுகள் எத்தனையோ அத்துமீறல்களுக்கு உட்பட்டது. தன்னிலை மறந்து எல்லைக் கோட்டை தாண்டி பேசியிருக்கிறார் பிரதமர். மற்றவர்கள் பேசினால் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். பிரதமரின் பேச்சு முக்கியத்துவம் பெறக்கூடியது. நாங்கள் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் அவரின் செய்கையை குறைக்கூறி தவறு என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் தன்னுடைய ரத கஜ துரக பதாதிகளோடு குமரிக்கு வந்திருக்கிறார். `மூன்று நாள்களுக்கு எந்த விதமான கப்பல் போக்குவரத்தும் அந்த பகுதியில் இருக்கக் கூடாது. விமானங்கள் அங்கே பறக்கக் கூடாது. டூரிஸ்ட்டுகள் வரக் கூடாது’ என்று ஒரு பெரிய தடை உத்தரவையும்போட்டு அந்த பகுதியிலுள்ள வியாபார ஸ்தலங்கள் ஸ்தம்பித்துபோகிற நிலையை உண்டாக்கிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்.
மகாத்மா காந்தியும் குஜராத்தைச் சேர்ந்தவர்தான். அங்குள்ள காந்தியின் ஆசிரமத்தை மோடி பார்த்திருக்க மாட்டாரா அல்லது காந்தியை பற்றியே தெரியாதா?. எங்கேயோ குக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியை கேட்டால்கூட காந்தியை பற்றி சொல்வார். ஆனால், `திரைப்படம் வந்த பிறகுதான் காந்தி என்பவரையே தெரியும்’ என்று மோடி சொல்வது, காந்தி மீது இவர்கள் எவ்வளவு வன்நெஞ்சம் கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. நம்முடைய கவர்னரும்கூட நாங்கள் ஏதோ தியாகிகளை மறைத்துவிட்டோம் என்று சொல்கிறார். `மறைத்தது’ அவர்தான். ஒரு விழாவிற்கு கவர்னர் அழைத்ததால், முதலமைச்சருடன் நானும், காந்தியின் பேரன் உள்ளிட்டோரும் கவர்னர் மாளிகைக்குப் போயிருந்தோம்.
அப்போது, `சுதந்திரத்துக்குப் பாடுபட்ட தியாகிகள் வரலாறு’ என்று ஒரு படம் காட்டினார். சுதந்திரத்துக்கு பாடுபட்ட மகான்கள் என்று வரும்போது, காந்தியையும், நேருவையும் மறைத்துவிட்டு சர்தார் வல்லபாய் பட்டேலில் இருந்து படத்தை காண்பித்தார்கள். ஆக, நேருவையும், காந்தியையும் அன்றைக்கு மறைத்தவர் இதே கவர்னர்தான். தியாகிகள் பற்றி பேசுவதற்கு அவருக்கு யோக்கியதை இல்லை. ஆனால், போதாத காலம். ஒரு எதிர்க்கட்சிகாரர் பேசுவதைபோல கவர்னரும் பேசியிருக்கிறார். அவரும் அரசியல் சட்ட மரபை மீறுகிறார் என்றுதான் பொருள். பொறுப்பில் இருப்பவர்கள் மீறுவார்களேயானால் நாட்டில் ஜனநாயகம் கேலி கூத்தாக மாறும். வேறு விதமான கருத்து புரட்சிகளும் நாட்டில் உருவாகும்.
அதேபோல, முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டும் விவகாரத்தை பொறுத்தவரை மாநிலங்களுக்கு இடையேயான பங்கீட்டின்படி நம்மை கேட்காமல் கேரள அரசால் ஒரு செங்கல்லையும் வைக்க முடியாது. `வைக்க கூடாது’ என்று உச்ச நீதிமன்றமே தனது தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஆகையினால், இவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் மனு கொடுக்கலாம். அவர்கள் `தமிழ்நாட்டின் ஒப்புதல் இருக்கிறதா?’ என்று முக்கியமான கேள்வியை கேட்பார்கள். `இல்லை’ என்று சொன்னால், உடனே நிராகரித்துவிடுவார்கள். எனவே, அரசியலுக்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காததைபோல நடந்துகொண்டாலும், அரசு குழுக்களால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது. இது அரசியல். நானும் 25 ஆண்டுகளாக இந்த இலாகாவைப் பார்க்கிறேன். பல மந்திரிகளையும் பார்த்திருக்கிறேன். வருபவர்களெல்லாம் `அணையை கட்டியே தீருவேன்’ என்று வீரவசனம் பேசுவார்கள். நிலைமை எனக்குப் புரியும். முல்லைப் பெரியாறாக இருந்தாலும், சிலந்தி ஆறாக இருந்தாலும், மேக்கேதாட்டூ அணையாக இருந்தாலும் நம்முடைய ஒப்புதல் இல்லாமல் அவர்களால் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியாது’’ என்றார்.