IND vs BAN Warm Up Match 2024: இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்றது. அதன்பின் சுமார் 11 வருடங்களாக ஐசிசி கோப்பையை கைப்பற்ற போராடி வருகிறது எனலாம். தோனி தலைமையில் 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை தோனியின் தலைமையில் இந்தியா கைப்பற்றியது.
அதன்பின் 2014ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பை, 2015ஆம் ஆண்டில் தோனி தலைமையில் ஐசிசி உலகக் கோப்பை, 2016ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் டி20 உலகக் கோப்பை என தோல்விகள் தொடர்ந்தன. 2017ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி, 2019இல் உலகக் கோப்பை, 2021இல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக் கோப்பை என விராட் கோலியின் தலைமையிலும் இந்தியாவால் கோப்பையை கைப்பற்ற இயலவில்லை. ரோஹித் சர்மாவின் கீழ் 2022இல் டி20 உலகக் கோப்பை, 2023இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி உலகக் கோப்பை என அனைத்திலும் தோல்வி.
இப்படி கடந்த 11 ஆண்டுகளாக தொடரும் கோப்பை தாகத்தை தீர்க்க மற்றொரு ஐசிசி தொடர் தற்போது தொடங்க உள்ளது. ஜூன் 2ஆம் தேதி தொடங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 20 அணிகள் இதில் குரூப் சுற்றில் மோதுகின்றன. 20 அணிகள் தலா 5 அணிகளாக நான்கு பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். சூப்பர் 8 சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த நாக்அவுட் போட்டிகளுக்கு தகுதிபெறும்.
இந்திய அணி (Team India) இதில் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய அணிகளுடன் முதலில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்து அணியை வரும் ஜூன் 5ஆம் தேதி இந்தியா சந்திக்கிறது. தொடர்ந்து ஜூன் 9, ஜூன் 12, ஜூன் 15 ஆகிய தேதிகளில் முறையே பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளுடன் இந்தியா மோத உள்ளது. இதில் கனடாவுக்கு எதிரான போட்டி மட்டுமே புளோரிடாவில் நடைபெறுகிறது. மற்ற அனைத்து போட்டிகளும் நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கு பின் சிறிய இடைவெளியை அடுத்து டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி, வங்கதேச அணியுடன் நாளை (ஜூன் 1) பயிற்சி ஆட்டத்தில் (IND vs BAN Warm Up Match) விளையாட உள்ளது. இந்த பயிற்சி ஆட்டத்தில் ஸ்குவாடில் இருக்கும் யார் வேண்டுமானாலும் விளையாடலாம் என்பதால், தங்களின் காம்பினேஷனை கண்டறிய இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தும் எனலாம்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா – வங்கதேசம் போட்டி என்றாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். 2016இல் வங்கதேசத்திற்கு எதிரான அந்த கடைசி ஓவர் த்ரில்லரை யாரால் மறக்க முடியும். ஹர்திக் பாண்டியா வீசிய அந்த கடைசி ஓவரின் கடைசி பந்தை பிடித்து தோனி செய்த ரன்அவுட் இன்றும் பலரின் நினைவில் பசுமையாக இருக்கும். எனவே, இந்த தொடரில் சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளும் மோதிக்கொள்ள வாய்ப்பிருந்தாலும், தற்போது இந்த பயிற்சி ஆட்டத்திலேயே மோத உள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை (ஜூன் 1) இரவு போட்டி தொடங்கும். இதனை நீங்கள் தொலைக்காட்சியிலும், ஓடிடி தளத்திலும் இலவசமாக பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பைக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்ததை ஸ்டார் குழுமம் பெற்றுள்ளதால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனிலில் இந்த பயிற்சி ஆட்டத்தை நேரலையில் நீங்கள் காணலாம். அதேபோல், ஓடிடி தளம் என்றால் ஹாட்ஸ்டார் செயலியில் எவ்வித சந்தாவும் இன்றி நீங்கள் இலவசமாகவே போட்டியை கண்டுகளிக்கலாம்.