1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்… டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!

ICC T20 World Cup Recap: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தருணம் என்றால் 1983 உலகக் கோப்பையை கபில் தேவ் தூக்கியதை சொல்லலாம். அதன்பின், 2011ஆம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற நிகழ்வையும் குறிப்பிடலாம். ஆனால், அதற்கு முன் தோனியின் தலைமைக்கு விதிட்ட ஒரு நிகழ்வு என்றால் 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையை சொல்லலாம். 

2007ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையை தோனியின் தலைமையில் கைப்பற்றியதே அப்போது இந்திய அணிக்கு (India National Cricket Team) புது ரத்தம் பாய்ச்சிய சம்பவமானது. அதன்பின் தோனியின் தலைமையில் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அதன் உச்சத்தை தொட்டது. எனவே, டி20 உலகக் கோப்பை என்றாலே இந்திய ரசிகர்களும் குதூகலமாகிவிடுவார்கள் எனலாம். அந்த வகையில், தற்போது 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், கடந்த 8 தொடர்களாக இந்திய அணியின் செயற்பாடுகளை இங்கு காணலாம். 

2007 டி20 உலகக் கோப்பை 

இதுதான் முதல் டி20 உலகக் கோப்பை ஆகும். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த தொடரில் தோனி (MS Dhoni) தலைமையிலான இந்திய அணி (Team India) 7 போட்டிகலில் விளையாடி, 4இல் வெற்றிலும் 1 போட்டியில் தோல்வியும் அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் சுற்று போட்டி டிராவில் முடிந்து அந்த போட்டியில் Bowled Out முறையில் வெற்றி பெற்று போட்டியை வென்றது. ஒரு போட்டி மழையால் முடிவின்றி ரத்தானது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.

2009 டி20 உலகக் கோப்பை

இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது. குரூப் சுற்றிலும் வங்கதேசம் மற்றும் அயர்லாந்தை வீழ்த்தி குரூப் சுற்றுக்கு வந்தாலும், சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தோற்று வெளியேறியது. இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி, 3இல் தோல்வியாகும். அந்த ஆண்டு கோப்பையை பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி கைப்பற்றியது. 

2010 உலகக் கோப்பை

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கோப்பை நடைபெற்று வந்த நிலையில், 2011ஆம் ஐசிசி உலகக் கோப்பை தொடரும் நடைபெற இருந்தது. எனவே, ஓராண்டுக்கு முன்பாக டி20 உலகக் கோப்பை 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்த தொடர் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல்முறையாக ஒரு உலகக் கோப்பையை வென்றது. இதிலும் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது. குரூப் சுற்றில் இரண்டு வெற்றிகளை பெற்ற இந்திய அணி, சூப்பர் 8இல் ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை ஆகிய அணிகளிடம் தோற்று வெளியேறியது. இதிலும் 5 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி, 3இல் தோல்வியாகும். 

2012 டி20 உலகக் கோப்பை

இந்த உலகக் கோப்பை இலங்கையில் நடைபெற்றது. இதில் குரூப் சுற்றில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. சூப்பர் 8இல் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்ற இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இருப்பினும், மோசமான நெட் ரன்ரேட் காரணமாக இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெறவில்லை. இதில் 5 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி, 1 தோல்வியாகும். இதன் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் கோப்பையை வென்றது. 

2014 டி20 உலகக் கோப்பை

இந்த தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் குரூப் சுற்றில் மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகளை வீழ்த்தி, அரையிறுதியில் விராட் கோலியின் அசத்தலான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இருப்பினும், இலங்கையிடம் தோற்ற இந்திய அணி கோப்பை நழுவவிட்டது. விராட் கோலி (Virat Kohli) அந்த தொடரில் 6 இன்னிங்ஸில் 319 ரன்களை அடித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார். இதில் 6 போட்டிகளில் விளையாடி இந்திய 5இல் வெற்றியும், 1 தோல்வியையும் சந்தித்தது.

2016 டி20 உலகக் கோப்பை

இந்தியா முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை நடத்தியது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளையும் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. மும்பை வான்கடேவில் நடைபெற்ற அரையிறுதியில் மேற்கு இந்திய தீவுகள் அணியிடம் இந்தியா தோற்றது. மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை இறுதிப்போட்டியில் வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது. இதில் இந்திய 5இல் 3 போட்டிகளில் வெற்றியும், 2இல் தோல்வியும் அடைந்தது. இதிலும் விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார். 

2021 டி20 உலகக் கோப்பை

 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக் கோப்பை நடைபெற்று வந்த நிலையில், இனி நான்காண்டுகளுக்கு ஒரு முறையே தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், 2020ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கரோனா தொற்று காரணமாக போட்டி அடுத்த 2021ஆம் ஆண்டில்தான் நடைபெற்றது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் நடைபெற்றது. இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் தோற்று  குரூப் சுற்றோடு வெளியேறியது. முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.

2022 டி20 உலகக் கோப்பை

அதன்பின் 2022ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை நடத்தப்பட்டது. இனி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையே டி20 உலகக் கோப்பை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்த தொடர் நடைபெற்றது. இதில் சூப்பர் 12 சுற்றிலும் 5 போட்டிகளில் விளையாடி 4இல் வென்று இந்தியா அரையிறுதி வரை வந்தது. அரையிறுதியில் இங்கிாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இந்த தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இங்கிலாந்து அணி 12 ஆண்டுகளுக்கு பின் அதன் 2வது கோப்பையை வென்றது.  

2024 டி20 உலகக் கோப்பை…?

2012ஆம் ஆண்டுக்கு பின் தற்போது 2024ஆம் ஆண்டில் குரூப் சுற்று போட்டிக்கு பின் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகிறது. இந்திய அணி இம்முறை அரையிறுதி வரை முன்னேறும் என நம்பப்படுகிறது. அரையிறுதி கண்டத்தை தாண்டி இறுதிப்போட்டியில் வென்று இந்தியா அதன் 11 ஆண்டுக்கால ஐசிசி கோப்பை தாகத்தை தீர்த்துக்கொள்ளுமா, விராட் கோலி மூன்றாவது முறையாக தொடர் நாயகன் விருதை வெல்வாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் பௌலர்கள் யார் யார்?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.