கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்யும் பிரதமர் மோடி. இந்தப் பகுதியைத் தியானம் செய்ய தேர்ந்தெடுத்ததற்குத் தனித்த காரணங்கள் இருக்கின்றன. அந்த முக்கியமான மூன்று காரணங்கள் குறித்துப் பார்க்கலாம். உலகத்துக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சும் சூரியனின் தோற்றத்தையும் மறைவையும் கன்னியாகுமரியிலிருந்து பார்க்க முடியும். அங்கு கட்டப்பட்டிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வரலாற்றில் தனித்த இடமுண்டு. இந்த நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று (மே 30) முதல் தியானம் செய்து வருகிறார்.
உருவாகிறதா புது சரித்திரம்? – கடந்த 1882-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக் கடலில் உள்ள பாறையில் தவம் செய்தார். விவேகானந்தரின் ஆன்மிக வாழ்க்கையில் இந்தத் தியானம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக, இந்திய நாட்டை இந்தப் பகுதியிலிருந்து வணங்க வேண்டும் என்னும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதனால், நாட்டில் புது சரித்திரத்தைப் பாஜக படைக்கப்போவதை அடையாளப்படுத்த தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி அங்கு தியானம் மேற்கொள்ளும் நகர்வை எடுத்திருக்கலாம்.
விவேகானந்தரும் பாஜகவும்: அதேபோல், தமிழகத்தில் சுவாமி விவேகானந்தரின் மண்டபம் கட்டமைக்கப்பட்ட வரலாறும் கவனிக்கத்தக்கது. விவேகனந்தர் நினைவிடம் கட்டுவதற்கு ஆர்எஸ்எஸ், ஜனசங்கத்தின் பங்கு முக்கியமானது. 1962-ம் ஆண்டு தொடங்கிய விவேகனந்தருக்கு மண்டபம் கட்டவேண்டும் என்னும் கோரிக்கை நிறைவேற 8 ஆண்டுகள் ஆனது. அதன் சுற்றுச்சூழல் மற்றும் அழகியலைக் காரணம்காட்டி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. இதில், ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கத்தினர் தீவிரமாகப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அதன்பின் காங்கிரஸ் ஆட்சியில் திமுகவின் ஆதரவுடன் இந்தக் கட்டிட பணி தொடங்கப்பட்டு 1970-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த ஏக்நாத் ரானடே முக்கியமான பங்காற்றினார். விவேகானந்தர் நினைவு மண்டபப் போராட்டம் என்பது, ஆர்எஸ்எஸ் – பாஜக வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும். காரணம் ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ இல்லாத நிலையில் இந்த வெற்றி அந்தக் கட்சிக்கும் அமைப்புக்கும் உந்துசக்தியாக இருந்தது. இவை பாஜகவின் தாய் அமைப்புகள் தான். எனவே, அதன் வெற்றியை நினைவுக் கூற பிரதமர் மோடி இங்கு தியானத்தை மேற்கொண்டிருக்கலாம்.
பாஜகவும் எல்லை தியானமும்: இந்தியாவின் வடகிழக்கில் பிரதாப்கர் என்னும் பகுதி இருக்கிறது. அங்குதான் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். இது நேபாளத்துக்கு அருகில் இருக்கும் எல்லைப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது, இமயமலையில் கேதார்நாத் குகையில், மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் தியானம் மேற்கொண்டார். அது வட இந்தியாவின் எல்லைப்பகுதியை ஒட்டியது. எனவே, அங்கு தியானம் மேற்கொண்டார்.
தற்போது தென்கோடி கன்னியாகுமரியில் தியானம் செய்வதன் வாயிலாக இந்தியாவின் அனைத்து எல்லைப் பகுதிகளுக்கும் உரித்தான கட்சி பாஜக . இந்திய நிலப்பரப்பு முழுவதும் பாஜக ஆட்சிக்கு கீழ் வந்துவிட்டதை உணர்த்தும் விதமாகத்தான் கன்னியாகுமரியை மோடி தேர்ந்தெடுத்திருக்கிறார் என்னும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன,