ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர் வசந்தா (28). தனது கணவரைப் பிரிந்துவிட்ட இவர், கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம், ஹொசலிங்கபுரத்தில், தாய் ராஜேஸ்வரி (50), மகன் சாய் தர்மதேஜ் (5) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்த வசந்தாவுக்கு கர்நாடகாவின் ஹோஸ்பேட்டையில் வசிக்கும் ஆசிப் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் திருமணம் மீறிய உறவாக அது மாறியிருக்கிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில், அதே நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஆசிப்-பின் அண்ணன் ஆரிப் என்பவரை ஆறு மாதங்களுக்கு முன்பு வசந்தா திருமணம் செய்து கொண்டார்.
இதனால், ஆசிப் வசந்தா மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை வசந்தாவின் வீட்டிற்கு வந்த ஆசிப், ராஜேஸ்வரியையும், சிறுவன் சாய் தர்மதேஜையும் கழுத்தை அறுத்து கொலைசெய்திருக்கிறார். அப்போது வேலைக்குச் சென்றிருந்த வசந்தா, வேலை முடிந்து திரும்பிய பிறகு, அவரும் ஆசிப்பால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி, “திருமணம் தொடர்பாக ஆசிப்பும், ஆரிப்பும் சண்டையிட்டிருக்கின்றனர். அதன் பிறகுதான் ஆசிப் கொலை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். கொலை செய்துவிட்டு தப்பிய ஆசிப்பை கைது செய்திருக்கிறோம். தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.” எனத் தெரிவித்திருக்கிறார்.