புதுடெல்லி: “பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் அதிகாரிகளுக்கு ரேவண்ணா ஒத்துழைத்ததாக தெரிகிறது” என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து நள்ளிரவு 12.50 மணிக்கு வந்தார். முன்னதாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், எஸ்ஐடி அவரை காவலில் எடுத்துள்ளது. ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் யாரேனும் இருப்பின் தாமாக முன்வந்து புகாரளிக்குமாறு முன்பே கூறியுள்ளோம். இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக எனக்கு இன்னும் அதிக தகவல் தெரியவில்லை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் அதிகாரிகளுக்கு ரேவண்ணா தேவையான ஒத்துழைப்பை அளித்து வருவதாகத் தெரிகிறது. அதிகாரிகள் தற்போது அவரை காவலில் வைத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கறிஞர் அருண் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விசாரணைக்கு ஒத்துழைக்க பெங்களூரு வந்ததால் தன்னை பற்றி எந்த எதிர்மறையான பிரச்சாரமும் வேண்டாம் என ஊடகங்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்” என்றார்.
பின்னணி: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே தலைமறைவான ரேவண்ணா ஜெர்மனி தப்பிச் சென்றது தெரிந்தது. அவர் தாயகம் திரும்ப கட்சி, குடும்பம் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், ‘‘மே 31-ம் தேதிகாலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என தெரிவித்திருந்தார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. அதை நிரூப்பிப்பேன் என்று கூறியதோடு குடும்பத்தினரிடமும், மக்களிடமும் மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து . லுஃப்தான்ஸா விமானம் LH0764 மூலம் நாடு திரும்பிய அவர் நேற்று (வியாழன்) நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்ய மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் 5 பெண் காவலர்கள் கொண்ட பிரத்யேக குழுவை சிறப்பு புலனாய்வுக் குழு அனுப்பிவைத்தது.
கைது செய்யப்பட்ட ரேவண்ணா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆஜராவார் என்றும் தெரிகிறது. இதற்கிடையில் அவர் தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.