Pulsar NS400: ரெண்டே கால் லட்சத்துக்கு ஒரு 400சிசி பைக்! டொமினாருக்குப் பதில் இது வாங்கலாம் போலயே!

ஆன்ரோடு விலை: சுமார் ரூ.2.25 லட்சம்

பஜாஜின் பெரிய சீரிஸ் பைக்காக இருப்பது டொமினார் 400. ஆனால், இதைப் பட்ஜெட் பார்ட்டிகள் பலரால் வாங்க முடிவதில்லை. காரணம், விலை. இதற்காக டொமினாரின் இன்ஜின் பெர்ஃபாமன்ஸையும், ஓட்டுதலையும் மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, பஜாஜ் தனது பல்ஸர் NS சீரிஸில் டொமினாரின் இன்ஜினையும் ஃப்ரேமையும் கொடுத்து – NS400 என்று ஒரு பெரிய பைக்கைக் களமிறக்கிவிட்டிருக்கிறது.

NS சீரிஸில் பெரிய பைக்காக வந்திருக்கிறது இந்த NS400. இதை ஓட்டிப் பார்க்கத்தான் என் டீமுடன் அப்படியே புனே கிளம்பிப் போய்விட்டேன். புனேவில் உள்ள சக்கான் தொழிற்சாலையில் அமைந்துள்ள ட்ராக்கிலும், லோனாவாலா எனும் மலைப்பிரதேசத்திலும் பல்ஸர் NS400 -யை ஓட்டிப் பார்த்து மகிழ்ந்தோம். அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்டைல் மற்றும் டிசைன்

இது லாஞ்ச் ஆகும் முன்பு வரை இது பல்ஸர் NS400 என்றுதான் நினைத்திருந்தேன். அப்போதுதான் கவனித்தோம்; கூடவே ஒரு Z என்றொரு எழுத்து ஒட்டிக் கொண்டிருந்தது ஸ்டிக்கரிங்கில். NS400Z என்பதுதான் பைக்கின் பெயர். இதை ‘இஸட்’னு சொல்லக் கூடாது. ‘ஸீ’ என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது – வருங்காலத்தில் ஏகப்பட்ட வசதிகளுடன், இந்த Z எனும் வேரியன்ட்டில் பல பைக்குகள் வருமாம்.

NS200-க்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. அந்த நேக்கட் ஸ்டைல் அப்படியே தொடர்கிறது. N சீரிஸில் உள்ள ஹெட்லைட் கொடுத்திருக்கிறார்கள். இதிலுள்ள புரொஜெக்டர் ஹெட்லைட் இரவில் வெளிச்சம் பீய்ச்சியடிக்கிறது. இதிலுள்ள LED DRL-யைக் கவனித்தால், ஒரு விஷயம் கண்டுபிடிக்கலாம். இதுவே Z எழுத்தைப்போல் பிரகாசிக்கிறது. NS125-ல் இருந்தே பஜாஜ் ஒரு விஷயம் கடைப்பிடிக்கிறது. அது அண்டர்பெல்லி எக்ஸாஸ்ட். சைலன்ஸர் பைக்குக்கு அடியில் போய்விட்டதால், ஓட்டும்போது கால் சூடு தெரிய வாய்ப்பில்லை. மேலும், குழந்தைகளைக் கூட்டிப் போகும்போது, சைலன்ஸர் பக்கத்தில்தான் நிற்பார்கள். இது கொஞ்சம் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால், இது மழைக்காலத்தில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

அகலமான சிங்கிள் பீஸ் ஹேண்டில் பார்… Clip on இல்லை. Bonded Glass டிஸ்ப்ளே!
17 இன்ச், எம்ஆர்எஃப் Zapper வீல்களின் செக்‌ஷனைக் குறைத்திருக்கிறார்கள்.
அண்டர்பெல்லி பேனில் 400 ஸ்டிக்கரிங், ஸ்டைல், ஸ்போர்ட்டியாக இருக்கிறது.
டொமினாரை விட 18 கிலோ எடை குறைவு.

NS200-ல் இதன் ஸ்டிக்கரிங் டேங்க் ஷ்ரெளடுகளில் கொடுத்திருப்பார்கள். இதில் ஷ்ரெளடில் வெறும் NS மட்டும் ஸ்டைலாக இருக்கிறது. 400 என்கிற ஸ்டிக்கரிங் இன்ஜின் அண்டர்பெல்லி பேனில் இருக்கிறது. இதுவும் செம ஸ்டைல்தான். மோட்டோ ஜிபி பைக்குகளின் ஏரோ டைனமிக்கை இன்ஸ்பயர் செய்து இதன் ஸ்ரெளடுகள் இருப்பதும் சூப்பர். ஃப்ரேம் மட்டுமில்லை; டொமினாரில் இருக்கும் அதே மிரர்கள்தான் இதிலும்.

NS சீரிஸில் வழக்கமாக க்ளிப்ஆன் ஹேண்டில் பார் கொடுப்பார்கள். ஸ்ட்ரீட் பைக் என்பதால், இதில் அகலமான சிங்கிள் பார் இருக்கிறது. NS200-யை விட வீல்பேஸ் குறைந்தாலும், கட் அடித்து ஓட்ட வசதியாக இருக்கிறது. சீட் இடவசதி ஓகே! சீட் உயரமும் பக்கா! ரைடிங் பொசிஷன் அருமையாக இருக்கிறது. NS200-ல் லைட் மெட்டாலிக் ஷேடில் USD Forks கொடுத்திருப்பார்கள். இதில் USD ஃபோர்க்ஸ், லேசான கோல்டன் கலரில் பளபளக்கிறது. வீல்களுக்கு செக்ஷனைக் குறைத்திருக்கிறார்கள். அதைக் கூட்டியிருக்கலாம்.

ஓவர்ஆலாக, இதன் நேக்கட் டிசைனைப் பொருத்தவரை- உங்களுக்கு NS200-யைப் பிடித்தால், NS400Z-யையும் பிடிக்கும்.

தரம், ஓட்டுதல் எப்படி இருக்கு?

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரைப் பற்றிச் சொல்ல வேண்டும். சில பைக்குகளில் மழை நேரங்களின்போது அதன் க்ளஸ்ட்டருக்குள் தண்ணீர் புகுந்து, கழுத்தைச் சுற்றிய பாம்புபோல போகவே போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும். பஜாஜ் இதில் Bonded Glass என்றொரு விஷயத்தைச் செய்திருக்கிறது. இது தரமாகவும் இருக்கிறது; வெயிலில் கிளார் அடிக்கவும் இல்லை; வேலைப்பாடும் சூப்பர். பல்ஸரின் டீஸர் வரும்போது இது நெகட்டிவ் டிஸ்ப்ளே ஆக இருக்கும் என்று நினைத்தேன்; இல்லை; இது கலர் டிஸ்ப்ளே! சூப்பராக இருந்தது.

12 லிட்டர் பெட்ரோல் டேங்க் நல்ல பல்க்கியாகவே இருக்கிறது. கேடிஎம்-ல் 15 லிட்டர் கொடுத்திருப்பார்கள். இந்த பைக்குக்கு இது ஓகே! தொடைக்கு நல்ல கிரிப் கிடைத்து ஓட்டுவதற்கு வாகாகவே இருக்கிறது. ஓவர்ஆலாக இதன் பில்கு குவாலிட்டி ஓகே என்றுதான் தோன்றுகிறது. டொமினாரைவிட 18 கிலோ எடை குறைந்து இதை டிசைன் செய்திருப்பதே பாராட்ட வேண்டும். அதனாலேயே ஓட்டுவதற்கு, எடை குறைந்தவர்களுக்குக்கூடப் பக்காவாக இருக்கிறது. மேலும் இது NS200-யைவிட 20 மிமீ வீல்பேஸ் குறைவு; அதனால் கட் அடித்து ஓட்ட சூப்பர். இதன் மொத்த எடை 174 கிலோ. பிஎம்டபிள்யூ G 310R பைக்கைவிட அதிகம்தான். இருந்தாலும் டொமினார் 400-யைவிடக் கம்மி.

இதன் 17 இன்ச், எம்ஆர்எஃப் Zapper டயர்கள் இந்த பைக்குக்கு இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டும். செக்ஷனையும் குறைத்திருக்கிறார்கள்; (140தான்). NS25-யிலும் இதே செக்ஷன்தான். மற்றபடி முன் பக்கம் 320 மிமீ; பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக்ஸ். டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பதால் பயப்படத் தேவையில்லை.

இன்னொன்று – இதில் Road, Sport, Rain, Off Road என 4 மோடுகள் கொடுத்திருக்கிறார்கள். இதற்கேற்றபடி ஏபிஎஸ் வேலை செய்யும் என்பது ஸ்பெஷல். வழக்கம்போல் ஆஃப்ரோடு மோடில் ஏபிஎஸ் ஆஃப் செய்துவிட்டு ஓட்டினால் செம எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்தது. மழை பெய்யாததால், நான் ரெயின் மோடு மட்டும் முயற்சிக்கவில்லை. மற்ற எல்லாமே சூப்பர். அட, ட்ராக்ஷன் கன்ட்ரோல், ரைடு பை ஒயர் டெக்னாலஜியும் இருப்பதும் சூப்பர். ட்ராக்ஷன் கன்ட்ரோல் இருப்பதால் வழுக்கும் சாலைகளில் பயப்படாமல் ஓட்டினோம். ரைடு பை ஒயர், மைலேஜுக்கும் உறுதுணையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பஜாஜ், இதன் டாப் ஸ்பீடு 154 கிமீ என்று க்ளெய்ம் செய்தது. ஆனால், நான் இதை 160 கிமீ வரை க்ளாக் செய்தேன். என்னுடன் பைக் ஓட்டிய துளசிதரன், 159 கிமீ வரை ஓட்டியதாகச் சொன்னார். மேலும், ஸ்லிப்பர் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் இருப்பதால், Knock Off பிரச்னைகளும் தெரியவில்லை. நான் 150 கிமீ-யில் டாப் கியரில் போய்விட்டு, சட்டென ஒரு கியர் குறைத்தாலும் பெரிதாகப் பாதிப்பு தெரியவில்லை. சிட்டிக்குள் ஓட்டும்போது ஸ்பீடு பிரேக்கரில் ஸ்லோ ஸ்பீடில் அதிக கியரில் ஓட்டிப் பார்த்தேன். நன்று!

இதன் இன்ஜினில் நன்றாக வேலை பார்த்திருக்கிறது பஜாஜ். ஆனால் இது டொமினாரில் இருக்கும் அதே 373 சிசி, 40bhp பவர் மற்றும் 35Nm டார்க் தரும் லிக்விட் கூல்டு இன்ஜின் செட்அப்தான். காலில் சூடு தெரியவில்லை என்பது ப்ளஸ். இதன் இன்ஜின் ஸ்ப்ராக்கெட்டில் நடைபெற்ற ஒரு சின்ன வேலை மூலம் ஓட்டுதலில் டொமினார் ஓட்டுவதற்கும் இதற்கும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. (அது என்னனு மோட்டார் விகடன் யூட்யூப் சேனலில் பாருங்க!) NS400Z சிட்டிக்குள் ஓட்டவும் சரி; ஹைவேஸில் க்ரூஸ் செய்யும் நன்றாக இருக்கிறது. அலுமினியம் ஸ்விங்ஆர்மில் மாற்றம் இருக்கலாமோ என்று மட்டும் தோன்றியது.

இதில் கனெக்டிவிட்டி வசதிகள் சூப்பர். நம் போனில் ஆப் மூலம் கனெக்ட் செய்து கொண்டால் – அழைப்புகள், மிஸ்டு கால்கள், மியூசிக் கன்ட்ரோல் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உண்டு. நேவிகேஷனெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது.

மற்றபடி, ஸ்விட்ச் கியர்கள் ஓகே! பிளாஸ்டிக் தரம் மட்டும் மேம்பட்டிருக்கலாம். ஆனால், விலை குறைந்த பைக்காச்சே! இதெல்லாம் குறையாகச் சொல்ல முடியவில்லை.

மைலேஜ் எப்படி?

நான் டொமினார் ஓட்டி வருகிறவர்களை விசாரித்தேன். NS400Z-யை 18 கிலோ எடை அதிகமான டொமினார் 400 பைக்கே, 28 கிமீ தருவதாகச் சொல்கிறார்கள் பலர். பஜாஜ் நிறுவனமே இந்த NS400Z பைக்குக்கு 28.5 கிமீ க்ளெய்ம் செய்கிறது. இதில் டேங்க் ஃபில் செய்தே கொடுத்தார்கள். நாங்கள் முடிந்தவரை ஓட்டிக் காலி செய்து முயற்சித்தோம். சிட்டி, ஹைவேஸ், ஹில் ஸ்டேஷன் என்று மாறி மாறி ஓட்டியதில், நிச்சயம் இது 29 கிமீ மைலேஜ் தந்திருக்கும். ஹைவேஸ் என்றால், 31 கிமீ-யைத் தாண்டலாம்.

NS400Z வாங்கலாமா?

பெரிதாகக் குறைகள் கண்டுபிடிக்க முடியாத இந்த பைக்கின் மிகப் பெரிய ப்ளஸ்ஸாக – நான் விலையைச் சொல்வேன். ரூ.1.85 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது பஜாஜ். ஆன்ரோடுக்கு வரும்போது சுமார் 2.25 லட்சம் வரும். இப்போது மார்க்கெட்டில் யமஹா MT15 என்கிற 150 சிசி பைக்கே சுமார் 2 லட்சத்தைத் தொடும் நிலை இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ரெண்டே கால் லட்சத்துக்கு 400 சிசி பைக் கிடைப்பதே பாக்கியம்தான். காஸ்ட் கட்டிங் என்கிற பெயரில் பல விஷயங்கைளைக் காலி பண்ணாமல் இருப்பதற்காகவே பஜாஜுக்கு ஒரு பெரிய சல்யூட்!

பஜாஜின் திட்டம் புரிகிறதா உங்களுக்கு? அதாவது, குறைவான சிசி பைக் ஓட்டும் கம்யூட்டர்களையும் பெரிய சிசி பைக்கு ஓட்ட வைப்பதுதான் பஜாஜின் மாஸ்டர் ப்ளான்! அதற்கு NS400Zதான் அடித்தளம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.