மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜித்தேந்திர பட்வாரி, இம்முறை மக்களவை தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் இரட்டை இலக்க எண்ணில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 27 இடங்களில் குறைந்தது 10 இடங்களை வெல்லும் என்றே அவர் சொல்ல வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டாலும் இம்முறை வாகை சூடும் என்று அக்கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர்.
இதனையொட்டி, வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் ஜூன் 4 ஆம் தேதி கட்சிக்காரர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கண்கொத்திப் பாம்பு போல கவனிக்கும்படி கட்சித்தலைமை வலியுறுத்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிடகட்சியின் செய்தித்தொடர்பாளர் அவ்நீஷ் பண்டேலா 100 கிலோ லட்டு ஆர்டர் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது பற்றி மாநில காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் நலனுக்காக பாஜக உழைத்திருந்தால், கொண்டாட மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், இந்த முறைபாஜகவால் கொண்டாட முடியாது. காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டரும் ஆற்றல் நிரம்பிக் காணப்படுகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து போபால் வந்து சேர காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ரயில் டிக்கெட்பதிவு செய்துள்ளனர். இது மத்திய பிரதேசத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் அரசை மாற்றும்முடிவை மக்கள் எடுத்துவிட்டனர். இவ்வாறு அப்பாஸ் ஹபீஸ் கூறினார்.