சென்னை: தெருவில் நடந்து சென்ற 12 வயது சிறுவனை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை புழல் லட்சுமிபுரம் டீச்சர் காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் ஜோசுவா டேனியல். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கிளியோபஸ் ஜெரால்டு (12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டுக்காரர், ராட்வைலர், பாக்ஸர் என்ற 2 நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை மதியம் சிறுவன் கிளியோபஸ் ஜெரால்டு கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டின் வெளி கதவு திறந்திருந்ததால், 2 நாய்களும் வெளியே நின்றுள்ளது.
சிறுவன் தெருவில் நடந்து சென்ற போது, சிறுவனை பார்த்து அந்த 2 நாய்களும் குரைத்துள்ளது. தொடர்ந்து, சிறுவன் மீது பாய்ந்து 2 நாய்களும் கடித்து குதறியது. இதில் சிறுவனின் தலை, மார்பு, கழுத்து, கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தந்தை, சிறுவனை 2 நாய்களும் கடித்து குதறி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக 2 நாய்களையும் விரட்டியடித்து, சிறுவனை மீட்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை புழல் போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நாய்களின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
தொடர்ந்து, ஆதம்பாக்கம், சூளைமேடு, ஆலம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய் கடித்த சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட சென்னை முகப்பேரில் இரண்டரை வயது பெண் குழந்தையை தெரு நாய்கள் கடித்ததில் அந்த குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து, சென்னையில் நாய் கடி சம்பவங்கள் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வெளியே செல்லவே அச்சப்பட்டு வருகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி இதற்கு நிரந்தர தீர்வு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.