மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதுவரை 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன.
கடைசி கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலின் போது அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், நகை, பரிசுப் பொருட்களை வழங்குவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் 30-ம் தேதி வரை ரூ.1,100 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்க நகைகளை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட தொகையை விட 182 சதவீதம் அதிகம். அந்தத் தேர்தலில் ரூ.390 கோடியை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.
இதில் டெல்லி, கர்நாடகா, தமிழகம் ஆகிய 3 மாநிலங்களில் அதிகளவில் ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி கர்நாடகாவில் தலா ரூ.200 கோடிக்கு அதிகமாகவும் தமிழகத்தில் ரூ.150 கோடிக்கு அதிகமாகவும் ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மொத்தம் ரூ.100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று வருமான வரித் துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.