விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள பாரதி நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் கணேசன். காரைக்காலில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரின் மகன் வினோத்குமார் உயிரிழந்து விட்டார். மகள் வினோதினி, சென்னையில் கணவருடன் வசித்துவருகிறார். இந்த நிலையில் மகளை பார்ப்பதற்காக, மனைவி விஜயலட்சுமியை அழைத்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கணேசன் சென்னைக்கு சென்றுவிட்டார். கணேசன் வீட்டில் ஆள் இல்லாத நிலையில் வீட்டின் வெளிப்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தை அதேப்பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் என்ற பெண்மணி தினமும் சுத்தப்படுத்தி வந்துள்ளார்.
அதன்படி வழக்கம்போல், வீட்டினை சுத்தப்படுத்த வேலம்மாள் வேலைக்கு வந்தபோது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வேலம்மாள் போலீஸூக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், வீட்டின் உள்ளே சென்று பார்க்கையில், அவரின் வீட்டு அறையிலிருந்த துணிமணிகள் கலைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து கணேசன் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை உறுதிசெய்த போலீஸார், கணேசனிடம் தொலைபேசியில் விசாரித்தபோது வீட்டு பீரோவில், 100 சவரன் தங்கநகை மற்றும் ரொக்கப் பணம் இருந்ததென தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல மற்றொரு கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது. இது குறித்து பேசியவர்கள், ‘ராஜபாளையம் பாரதி நகர் பகுதியில் வசித்துவரும் குமார் என்பவர் பணிநிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில், குமாரின் அவரது மனைவி அர்ச்சனா தனது மகளுடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார். இரவு நேரமாகிவிட்டதால் உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து, காலை வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6.5 பவுன் தங்க நகைகள் மற்றும் நில பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கொள்ளை குறித்து, தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீஸார் வழக்கும் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர். ராஜபாளையத்தில் ஒரே பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் துணிகர கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.