கோவை: கோவையில் தொழிலதிபர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் நிறைவில், கணக்கில் வராத ரூ.4 கோடியே 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பெரோஸ்கான். இவர், பெங்களூரில் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவை குனியமுத்தூர் அர்ச்சனா நகரிலும் வீடு உள்ளது. பெரோஸ்கான் ஹோட்டல் தொழில் செய்து வருவதுடன், செல்போன் டீலராகவும் இருந்து வருகிறார். இவர் முறையாக வருமான வரி செலுத்தாமல் உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதனடிப்படையில் பெங்களூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று (ஜூன் 1) சோதனை நடத்தியதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவை குனியமுத்தூரில் உள்ள பெரோஸ்கானின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மதியம் 1 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது, வீட்டின் ஒரு பகுதியில் கணக்கில் வராத ரூ.4 கோடியே 10 லட்சம் பணம் கட்டுக்கட்டாக அடுக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், மற்றொரு பகுதியில் துப்பாக்கி இருந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் அங்கு சென்று அதை சோதனை செய்தனர். அதில் அந்த துப்பாக்கி ஏர்கன் வகையைச் சேர்ந்தது எனவும். அதற்கு உரிய ஆவணங்கள் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து சோதனையின் நிறைவில் கணக்கில் வராத ரூ.4.10 கோடி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ஏர்கன் துப்பாக்கி, ஆவணங்கள், கணினி தொடர்பான சில பொருட்கள் உள்ளிட்டவற்றையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.