ராமநாதபுரம்: கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு, கடலளவு பேராசை படுகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் அமைச்சரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான ஆர்.பி.உதயகுமார், வேட்பாளர் ஜெயபெருமாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிமுக முகவர்கள் செயல்பட வேண்டும் என பொதுச்செயலாளர் பழனிச்சாமி அறிவுரை வழங்கியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுகளவு அனுபவத்தை வைத்துக் கொண்டு, கடலளவு பேராசை படுகிறார். பாஜக அனுபவம் வாய்ந்த கட்சி என்றாலும், தமிழக தலைவர் அண்ணாமலை, மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல் செயல்படுகிறார்.
அதிமுகவின் எதிர்காலத்தை கணிக்கும் அதிகாரம் தமிழக மக்களுக்குத்தான் உள்ளது. அண்ணாமலைக்கு அல்ல. எந்தக் கட்சி தமிழக முதல்வராக்கியதோ அதை மறந்துவிட்டு அதிமுகவையே எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். அவர் போட்டியிட்டுள்ளதை எந்த தொண்டரும் ஏற்கவில்லை. இந்த தேர்தல் தீர்ப்பு அவருக்கு பாடமாக அமையும்.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்தது, அரசியல் நோக்கம் இல்லை. அவரின் தனிப்பட்ட செயல். அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. சிலந்தியாற்றில் அணை, காவிரியில் மேகேதாட்டு அணை கட்ட முடிவு போன்ற பிரச்சினைகளை மக்கள் பிரச்சினைகளாக எடுத்து தகர்த்தெறியும் வகையில் அதிமுக போராடி வருகிறது என தெரிவித்தார்.