அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக-ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று மாலை வெளியானது. இதில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே, சிஎன்என், ஏபிசி நியூஸ், நியூஸ் எக்ஸ், இண்டியா டிவி, ஜி நியூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன.
தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 120 முதல் 130 இடங்கள் கிடைக்கும் எனவும் ஜெகன் கட்சிக்கு 40 முதல் 45 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. நகரி தொகுதியில் நடிகை ரோஜா உட்பட பல்வேறு அமைச்சர்கள் தோல்வியை தழுவுவார்கள் எனவும் அந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில், தெலுங்கு தேசம் கூட்டணி 17 முதல் 18 தொகுதிகள் வரை வெற்றி பெறும் எனவும், ஆளும் ஜெகன் கட்சிக்கு 6 தொகுதிகள் கிடைக்கும் எனவும், கடப்பாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒய்.எஸ். ஷர்மிளா வெற்றி பெறுவார் எனவும் தெரிவிக்கின்றன.
தெலங்கானாவில்.. இதேபோன்று தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 9 லிருந்து 10 இடங்கள். பாஜக 5 முதல் 6. பிஆர்எஸ் கட்சி 1, எம்ஐஎம் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.