இம்பால் / குவாஹாட்டி: கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ரீமல் எனப் பெயரிடப்பட்டது.
இது வங்கதேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே கடந்த மாதம் 26-ம் தேதி நள்ளிரவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேம்பாலங்கள் உடைந்தன. விளைநிலங்களை வெள்ளம் சூழந்தது.
மணிப்பூரின் இம்பால், அசாமின் குவாஹாட்டி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள், கிராமப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளம், மழைக்கு 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து வடகிழக்கு மாநிலங்களில் கனமழை, வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக அசாம், மணிப்பூரில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் பாதிக்கப்படடுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர் களுக்கு இரு மாநில அரசு சார்பில் ஆங்காங்கே வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மாநிலங்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.