நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும், ஜனசேனா கட்சியின் தலைவரும். நடிகருமான பவன்கல்யாண், இம்முறை தெலுங்கு தேசம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளார். கடந்த முறை இவர் தனியாக போட்டியிட்டதின் விளைவாக, தெலுங்கு தேசம் கட்சியின் 6 சதவீத வாக்குகள் சிதறின.
இதனால், ஜெகன்மோகன் ரெட்டி அதே 6 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைத்தார். இதனால், இம்முறை சந்திரபாபு நாயுடு, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பவன் கல்யாணை தன்னுடன் வைத்து கொண்டார். தொகுதி பங்கீட்டில் பவன் கல்யாண் கட்சிக்கு, 2 மக்கைைவ, 11 சட்டப்பேரவை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.
இதில் பவன் கல்யாண் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிட்டாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டுள்ளார். கடந்த 2019-ல் இவர் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தார். ஆதலால், இம்முறை இவர் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டுமென இவரது ரசிகர்கள் பலர் பலவிதமாக நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இதில், கிழக்கு கோதாவரி மாவட்டம், உண்ட்ரவாராம் எனும் ஊரை சேர்ந்த ஆர்.எம்.பி பெண் மருத்துவரான துர்கா ராமலட்சுமி என்பவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் முழங்காலால் படியேறி திருமலைக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘தனக்கு கட்சி பேதமில்லை. என்றும், தான் ஒரு பவன் கல்யாணின் தீவிர ரசிகை ஆதலால் அவர் இம்முறை கண்டிப்பாக எம். எல்.ஏவாக வெற்றி பெற்று சட்ட சபையின் படியேற வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. ஆதலால், எல்லாம் வல்ல ஏழுமலையானை வேண்டிக்கொள்ளவே நான் முழங்காலில் படியேறி வந்தேன். எனது கோரிக்கையை பெருமாள் ஏற்றுகொள்வார் என எதிர்பார்க்கிறேன்’ என்றார்.