சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கடும் வெயிலின் தாக்கத்தால் நீரிழப்பு, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 10-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், அனைத்து பள்ளிகளையும் ஜூன் 10-ம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 3-வது வாரத்தில் திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.